கண்ணன் என் காதலன்

கண்முன் நின்றாய் - என்
கரம் பட மறைந்தாய்
மண்ணை அளந்தாய் - என்
மனத்தைக் கவர்ந்தாய்
இன்முகச் சிரிப்பால் - என்
இதயம் நிறைந்தாய்
செந்தேன் மொழியால் - என்
செவியை நனைத்தாய்
குழலூதி ஆநிரை மேய்த்தாய்- உன்
எழில் கொண்டு என்னகம் வென்றாய்
பிஞ்சு பாதங்கள் - அதில்
கொஞ்சும் சலங்கைகள் !
தாமரை விழிகள் - அதில்
ததும்பும் லீலைகள் !
கார்முகில் வண்ணன் உன்னை !
கரம்பற்ற நினைத்தேன் நங்கை !
சூடிக்கொண்டாய் மெல்லிய மயிலிறகை !
சுந்தரனையடைய விரித்தேன் என் சிறகை !
உன் சிணுங்கலில் சிதைகிறேன் !
உன் சிந்தையில் மிதக்கிறேன் !
உன் பார்வையில் பசி மறந்தேன் !
உன் ஆடலில் எனை இழந்தேன் !
மோகம் கொண்ட மனம்
மோதி அலைகிறது தினம்
காதல் கொண்டது உள்ளம்
கண்ணில் பெருகுது வெள்ளம்
காற்றில் வரும் உன் ஓசை - அதைக்
கட்டித் தழுவிட ஆசை
மனம் கமழும் உன் பூமாலை
மார்போடு சூடுவேன் நாளை
கண்கவர் அழகில் மயங்கினேன் மங்கை !
கயவனே நீ வீரத்தில் வேங்கை !
செவ்விதழ் கொண்டு வருடினாய் என்னை !
செருக்கழிந்து நான் அடைந்தேன் உன்னை !