கண்ணன் என் காதலன் - 2

சிந்தையில் உறையும் உன்னை நினைக்கிறேன் !
விந்தையில் நான் நிற்பதை எண்ணி வியக்கிறேன் !

சொல்லும் சொற்களில் உன்குரல் கேட்கிறேன் !
செல்லும் பாதையில் உன்முகம் காண்கிறேன் !

உன்னை விட்டு விலகினால் தவிக்கிறேன் !
என்னை உன்னிடம் சேர்க்கத் துடிக்கிறேன் !

சிணுங்கும் உன்னைக் கண்டு சிலிர்க்கிறேன் !
சினம் கொண்டு நீ செல்லும்போது சிவக்கிறேன் !

காந்தம் போன்ற கண்களைக் காண்கிறேன் !
காந்தர்வனின் அழகில் கரைகிறேன் !

உரைக்கும் உன்னத மொழிகளில் உறைகிறேன் !
உருகிய மனதால் எனைமறந்து உளறுகிறேன் !

நகைக்கும் நளினத்தில் நாயகனாய் நிற்கின்றாய் !
நங்கையின் நாணம் பெருகச் செய்கின்றாய் !

அழகில் சிறந்தவன் நீ
அழுகையைத் துடைப்பவன் நீ

கண்ணின் விழி நீ
காற்றின் மொழி நீ

கருத்தின் கூற்று நீ
கவிதையின் ஊற்று நீ

சிரிப்பின் அழகில் சிதறடித்தாய் என்னை !
சீரிய சிந்தையால் சிறைப்பிடித்தாய் என்னை !

மனம் வென்ற மாதவன் உன்னை !
மணக்க விழைகிறேன் மானுட மங்கை !

- அரங்க ஸ்ரீஜா

எழுதியவர் : அரங்க ஸ்ரீஜா (28-May-15, 9:49 am)
பார்வை : 2241

மேலே