குட் டச், பேட் டச்னா என்னம்மா

ரேவதி முகத்தில் பதட்ட ரேகை அப்பட்டமாக தெரிந்தது, கண்ணாடிக்கு முன் எத்தனை முறை முயற்சி செய்தும் சீ சீ இப்படி சொல்ல கூடாது என்று தன்னையே நொந்து கொண்டு இறுதியில் சோர்ந்து போய் மெத்தை மீது அமர்ந்தாள்...

என்னங்க, ப்ளீஸ் நீங்களே சொலுங்களேன், என்னால முடியல...

அதுலாம் முடியாது, இத பத்தி பேச நீ தான் சரியான ஆளு, நான் பேசினா விஷயம் தப்பாயிடும்...
அது மட்டுமா நீ தான் சிறந்த டீச்சராச்சே, அடிக்கடி சொல்லி பெருமை பட்டுபியே, அதலாம் இப்ப எங்க போச்சு...நீ தான் இந்த விஷயத்த பத்தி பேசணும், அது உன் பொறுப்பு...

இதலாம் அநியாயம் இப்படி என்ன மாட்டி விடரின்களே, அவ கண்ண பாத்தாலே எனக்கு பேச்சே வரமாட்டேன்குது, நான் ஏடாகூடமா ஏதாவது பேசிட்டா அவ்ளோதான் அவ கேட்கற கேள்விக்கு யாராலையும் பதில் சொல்ல முடியாது...நீங்க எவ்ளோ பெரிய அறிவாளி இத மட்டும் நீங்களே செஞ்சுடுன்களேன்,குட் பாய் தானே ப்ளீஸ் (ரவியின் பின்னே பழிப்பு காட்டிய படி கூறினாள் ரேவதி)...

வாசலில் பள்ளி வேனின் ஆர்னர் சத்தம் கேட்டது,இவர்களின் இந்த கெஞ்சலும் கொஞ்சலுமான பேச்சுக்கிடையிலேயே ரேஷ்மி வந்துவிட்டாள்...

அம்மா.... என்று உரக்க கத்திக்கொண்டே ஓடிவந்த ரேஷ்மியை வாரி அணைத்துக்கொண்டு கட்டிலில் அமர்ந்தாள்....

ரேஷ்மி,அப்பா இப்ப வெளிய போறேன், வரும்போது உனக்கு சாக்லேட் வாங்கிட்டு வரேன், அப்பாக்கு ஒரு முத்தம் குடு என்று அவள் குடுத்த அன்பு முத்தத்தை வாங்கிகொண்டு ரேவதிக்கு கண்ணாலே சிக்னல் காட்டிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டான் ரவி...

இப்படி என்ன மாட்டி விட்டுடீங்களே என்று ரவியை முறைத்தபடி எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று
மனதுக்குள் வார்த்தைகளை தேடி கொண்டிருந்தாள் ரேவதி...

தன் ஸ்கூல் பேக்கை வைத்து கள்ளம் கபடமில்லாமல் விளையாடி கொண்டிருந்த தன் மகளை தன் கைக்குள் கொண்டு வந்து ரேஷ்மி நீ நேத்து குட் டச்னா என்ன,பேட் டச்னா என்னனு கேட்டியே அம்மா இப்ப அதுக்கு பதில் சொல்றேன் தெளிவா கேட்டுக்கோ, குறுக்கு கேள்விலாம் கேட்க கூடாது சொல்றத மட்டும் புரிஞ்சிக்கோ என்று மெல்ல ஒரு பெரிய உரையை ஆரம்பிப்பது போல முகபாவத்தை வைத்து கொண்டு ரேவதி பேச ஆரம்பிப்பதற்குள்

" அம்மா குட் டச்னா நீயும் அப்பாவும் அன்பா என்ன தொடறது, அப்புறம் அன்னைக்கு நம்ப வீட்டுக்கு வந்து என்ன கூட விளையாட தூக்கிட்டு போனாரே ரமேஷ் அங்கிள் அவரு மாதிரி என்ன அங்க இங்க யாராவது தொட்டா அது தான் பேட் டச்...

எனக்கு இன்னைக்கு தான் என் ப்ரெண்ட் மாலா சொன்னா" என்று மிக பெரிய விஷயத்தை தெரிந்து கொண்ட சந்தோஷத்தில் படபடவென கூறிவிட்டு ரேவதியின் கையிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு விளையாட ஓடினால் ரேஷ்மி...

தான் இவ்வளவு நேரம் எதற்காக படபடத்து கொண்டிருந்தேனோ அதை இவ்வளவு சுலபமாக கூறிவிட்டு போய்விட்ட தன மகளை வெச்ச கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தாள் ரேவதி...
எல்லாம் முடிந்து வெற்றி பெற்ற மிதப்பில் தன்னை ஆசுவாசபடுத்திகொள்ளும் நேரத்தில் தான் அவளுக்குள்ளே ஒரு கேள்வி....இதில் ரமேஷ் அண்ணா எதற்கு வந்தார், ஒருவேளை............குழப்பத்தின் உச்சத்தில் அசையாமல் சிலையாய் போனாள் பெண் குழந்தையை பெற்ற அம்மாவாக ....

எழுதியவர் : இந்திராணி (29-May-15, 12:48 pm)
பார்வை : 442

மேலே