கள்ளச்சாவியும் தலையணையும் - சந்தோஷ்
தாகம் தவித்தெனது விரல்கள்
கள்ளியின் இடைக்குளத்தில்
காதல் குடித்து தணித்தது,
சினத்தில் சிவந்த முகத்தோடு
அவளின் துடித்த உதடுகளும்
எனது உணர்ச்சிப்பிரவாகங்களின்
எல்லா எல்லையிலும்
எல்லா விளம்பிலும்
மாயைக் கிளர்ச்சியை
இருதயத்துடிப்பிலிருந்து கடத்தப்பட்டு
காமத்துடுப்பாக்கியது .
எனது மின்மயமான
காதலேறிய உணர்வலைகள்
கட்டுப்பாட்டுக் கோட்டைக்
கடந்துவிடும் வீரத்தோடு
ரேகைகளற்ற உள்ளங்கையில்
ஜோசியக் கீரல்போடும்
கற்பனை வளத்தோடு
மேனகையவளின் மெளனக்கோபத்தை
மோக கள்ளச்சாவிக்கொண்டு
திறந்திடும் திருட்டுப்புத்தியோடு
அனலில் வார்க்கப்பட்டெனது
மேலுதடு எதிர் மின்புலமாய்
கீழுதடு நேர் மின்புலமாய்
முத்த மின்சாரம்
மொத்தமாய் பாய்ச்சிட
செவ்விதழ்காரியின்
பளிங்கு முகமாளிகை
நோக்கி
தேவதையை நேர்நிறுத்தி
நுரைக்கக்கும் போத்தல்களாய்
குமிழ் உடைக்கும் அவசரமாய்
மெல்ல மெல்ல
இறுக இறுக இறுக்கினேன்
நேற்றிரவு என்
சொப்பனத் தலையணையை....!
இன்றைய விடியலில்
நினைவுகளை கழுவி விட்டு
கம்பீரப் புருஷனாகிவிட்டிருந்தேன்.
நாளை வேறொரு
சிநேகிதி எனக்கு
புதுக்காதலியாக வேண்டுமென்று
விண்ணப்பம் செய்திருக்கிறாள்.
புறப்படுகிறேன்........
அடுத்த காதல் கவிதைத் தொகுப்புக்கு
கவிதை சமைக்க வேண்டும்...!
-இரா.சந்தோஷ் குமார்.