பொள்ளாச்சி அபி சிறுகதைகள் – திறனாய்வு போட்டி – இன்னுமொரு கண்ணி
கதையின் முதல் வரியே படிக்க ஆரம்பிப்பவர்களை வேகமாக உள்ளே இழுக்கும் வகையில் அமைய வேண்டும்.”வரதராஜனுக்கு அதிர்ச்சியாக இருந்தது; தான் கனவில் கூட நினைத்துப் பார்த்திராத அந்த செய்தி காதில் விழுந்தபோது ” என்ற வரி அப்படிப்பட்ட வரியே !
“காம்பவுண்டு சுவர் இரு வீடுகளையும் பிரித்ததே தவிர, இருபது வருட நட்பு பிரியாமலே இருந்தது ” என்பது நினைவில் நிற்கக் கூடிய அருமையான வர்ணனை !
தன் நண்பரிடம் செய்தியை தனியாக சொல்ல வேண்டும் என்பதற்காக பாலகிருஷ்ணனை குடும்பத்துடன் கல்யாணத்துக்கு வெளியூர் போகாதபடி செய்வது, பொள்ளாச்சி அபி அவர்களின் திட்டமிட்ட கதை அமைப்பு !
அது மட்டுமல்ல; கணேசனின் அறையை குடும்பம் புழங்கும் அறைகளிலிருந்து தனித்து வெளியே இருக்கும்படி செய்வதன் மூலம், அவன் தான் நினைத்த ரகசிய செயலை எளிதாக செய்ய வைத்ததும் அபி அவர்களின் திட்டமிட்ட கதை அமைப்பு!
அடுத்து, கீழே உள்ள வரி மூலம் அபி அவர்கள் நம் மனதில் ஏற்படுத்தும் பாதிப்பு என்ன?
“கணேசனைப் புரட்டி எடுக்கும் ஆவேசத்துடன் அவன் அறையில் நுழைந்ததும் வரது ஸ்தம்பித்து நின்றார் .
நூற்றுக்கணக்கான நோட்டிசுகளும் , ஆணுறைகளும் ,போட்டோக்களும் அறையெங்கும் சிதறிக் கிடந்தன!”
ஒரு திடுக்கிடும் திரைப்படக் காட்சியை நம் மனதில் நங்கூரம் பாயச்சவில்லையா?
சிறு கதையாக இருந்தபோதும் பாத்திரப் படைப்புகள் சோடை போகவில்லை;
கணவன் மீது அக்கறையும் , மரியாதையும் உள்ள மனைவியாக , மகன் மீது அளவில்லா பாசம் கொண்ட தாயாக ---- லட்சுமி!
கேட்காமலே உரிமை எடுத்துக்கொள்ளும் ,அதே சமயம் உண்மையான நண்பனாக---பாலகிருஷ்ணன் ! “நீ ஒன்றுமே செய்ய வேண்டாம்; உன் மகனைத் திருத்துவது என் பொறுப்பு !” என்ற ரீதியில் பேசுவது வாசகர் நெஞ்சைத் தொடுகிறது ; “உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு ” என்ற நட்பைப் பற்றிய குறளுக்கு உதாரணமாக விளங்குகிறார்! நண்பனின் மகனை எப்படிக் கண்டிக்க வேண்டும் என்ற பக்குவமும் இவரிடம் வெளிப்படுகிறது !
பெற்றோர் பாசமுள்ள பொறுப்புள்ள மகனாக, குழந்தைகட்கு பாடம் சொல்லித்தரும் ஆசானாக சமுதாயப் பொறுப்புள்ள இளைஞனாக --- கணேசன் !
இந்த கவனமான பாத்திரப் படைப்புகளால் , ஒரு நல்ல சிறு கதையை அல்ல , நாவலைப் படித்த திருப்தி ஏற்படுகிறது !
இந்தக் கதை வாசகர்கள் மனதில் ஏற்படுத்தும் முக்கியமான பாதிப்பு என்ன தெரியுமா ?
எல்லோரும் மறுபடியும் கணேசனையும் அவன் பெற்றோர், அடுத்த வீட்டு நண்பரையும் சந்திக்கப் போகிறோம் என்று நம்ப ஆரம்பித்து விட்டோம் ! “உன் பிரச்சாரம் எந்த அளவில் வெற்றிகரமாகப் போய்க்கொண்டிருக்கிறது ?” என்று அவ்வப்போது கேட்கத் துடிக்கிறோம்! .
வாழும் பாத்திரங்களைப் படைத்த எழுத்தாளர் பொள்ளாச்சி அபியின் எழுத்து வன்மை வாழ்க ! வளர்க!
இது என் சொந்த படைப்பே என்று உறுதி கூறுகிறேன் .
ம .கைலாஸ்