பாட்டனின் பாட்டு
பூவொன்று பனியில் பூத்தது போல்
பொற்குவியல் கையில் விழுந்தது போல்
தீரா நதியொன்று தேனாய் பாய்ந்தது போல்
பேரா வந்தாய் பெரும்பேறு செய்தாய்
வானூறு நிலவொன்று வழிமாறி வந்ததுபோல்
வண்ணச் சுடரொன்று வடிவம் தந்ததுபோல்
சின்னப் பறவையொன்று சிறகாட்டி நடந்ததுபோல்
கன்னம் குழிவிழ கவினுருவாய் நீ வந்தாய்!
எண்ணத்தில் இப்பாட்டன் இதுவரை சேர்த்ததெல்லாம்
உன்னிடத்தில் சொல்லவே ஓடோடி வந்தேன்
சின்னக் குழந்தையிடம் செல்லரித்துபோன அறிவுரையா
முன்னம் பழங்கதையாயென நீ முகம் திருப்பக் கூடாது
பண்பான தமிழ் பேசி நீ வளரவேண்டும்
பாரதியையும் கம்பனையும் நீ பயில வேண்டும்
பக்தியோடு பகுத்தறிவை நீ பழக வேண்டும்
பள்ளத்து மனிதருக்கும் கை கொடுக்க வேண்டும்
உள்ளத்தில் நல்லதையே நீ உள்ள வேண்டும்
உறவோடு உணர்வுகளையும் மதிக்க வேண்டும்
கள்ளமில்லாச் சிரிப்புடனே விளங்க வேண்டும்
காலமெல்லாம் புகழுடனே வாழ வேண்டும்
பாட்டனிவன் வார்த்தைகளை கேட்க வேண்டும்
பலருக்கும் நல்லதையே செய்ய வேண்டும்
படிப்போடு பணத்தையும் நீ குவிக்க வேண்டும்
பசித்திருக்கும் ஏழைக்கு அதைப் பகிர வேண்டும்!