மனுச வேசம்
நான் மனிதன் அல்ல
நடமாடும் மனித வேசம் தான்
விழிகளில் ஒளி இல்லை
வெண்கலக் குரலும் இல்லை
சிந்தனைச் செறிவுற்ற
சாந்தம் அமைதி முகத்தில் இல்லை
கோபம் அழுகை சிரிப்பிலும்
உயிரைக் காணோம்
முகம் மலடாகி விட்டது
முகபயிற்சி ஒத்திகைக்கும்
முரண்டு பிடித்து வேசம் கலைகிறது
வயற்றைக் கழுவும் வழியைக் காணோம்
நகை கடை மறு திறப்பு விழாவிற்கு
அந்தரத்தில் மிதந்து வரும்
திரை உலகத் தேவ தேவதையர்
வண்ணம் தீட்டிய வாயின்
இடை நில்லாச் சிரிப்பு
தொண்டன் வீட்டுச் சாவுக்கு
அழகு நிலைய ஒப்பனை சகிதம் வந்தருளி
தேம்பித் தேம்பி ஒப்பாரி வைக்கும்
தலைவாதி தலைவர்களின் அழுகை
முன்னே பிறந்தது
முட்டையா கோழியா
பட்டிமன்றப் போரில்
எதிரிகளை நெற்றிக் கண்ணால்
சுட்டுச் சாம்பலாக்கும்
பேச்சாளப் பெருந்தகையர் கோபம்
இம்மூன்றும் தகவமைந்து
தேவைகேற்பத் தானியங்கும்
விலையில்லாக் கணினி முக மூடி கிட்டினால்
எனது வேசம் கலையாது இருக்கும்
மனிதப் பட்டியலில் என் பெயர் நிலைக்கும்.
நரியனுர் ரங்கு செல் : 9442090468