எப்பொழுதும் போலவே இருந்து விடுகிறேன்

எப்பொழுதும் போலவே
இருந்து விடுகிறேன்.

வடியும் காற்றின் சீற்றமாய்
ஓய்ந்து போகிறது
என் தனிமைக் காலம்.

உறைந்த நினைவுகள்
வலி முடிச்சுகளாகி...
கள்ளிகள் மலர்கின்றன
நெகிழ்வற்ற என் மனப் பரப்பில்.

வழியற்று...
வறண்ட பாலையில் விழுந்துவிட்ட
என் ஒற்றைப் புன்னகை
எதையோ தேடியலைய...

அசை போடுகிறது
நினைவுச் செதில்கள்
வாழ்வு தொலைத்த நிலவை.

கண்ணீரின் நதிப் புறத்தில்
கரை ஒதுங்குகிறேன்...
கடல் சேர்த்த கிளிஞ்சல்கள் என
உன் நினைவுகளை ஒதுக்கியபடி.

இன்று...
கடந்த வாழ்வின்
எச்சம் பூசிய பொழுதுகள்
எனது கூடாகிவிட...

என்னை அனுமதியேன்....

நான் எப்பொழுதும் போலவே
இருந்து...

இறந்துவிட.

எழுதியவர் : rameshalam (8-Jun-15, 12:06 pm)
சேர்த்தது : rameshalam
பார்வை : 119

மேலே