அவள் அப்படித்தான்

வீட்டுத்திண்ணையில் காலார அமர்ந்து நாளிதழ் படித்துக்கொண்டிருந்தார் இராமசாமி.60 வயதை கடந்திருந்தார் கடந்த திங்களன்று.அரசு வேலையிலிருந்து ஓய்வுற்றிருந்தார்.

மனைவி இலட்சுமி.குணவதியவள்;ஆனால் கோவந்தான் அடிக்கடி எட்டிப்பார்க்கும்.பெற்ற பிள்ளைகள் பட்டணத்தில்.மாதச்செலவும் மருத்துவச்செலவும் இவர் பென்சனில் தான்.


திடுதிடுவென கோபத்தோடு வந்து அவர் அருகே அமர்ந்தான் திரு.இவன் இராமசாமியின் தோழன் மகன்.சிறுவயது முதலே இராமசாமியின் மீது கொள்ளை பிரியம்.இறைவனடி சேர்ந்த தன் தந்தையின் பரம்பரை சொத்துக்கள் மூலம் வந்த நியாய வருவாயில் குடியிருப்பு கட்டியிருந்தான்.எத்தனை முறை தன் குடியிருப்பில் இராமசாமியை இலவசமாக தங்க கூறியும்,அவர்-பெரியவர்,மறுத்துவிட்டார்.

"பெரியப்பா எனக்கு என் பொண்டாட்டிய நெனச்சா கோவமா வருது."
திரு இராமசாமியை பெரியப்பா என்றே அழைப்பது வழக்கம்.

"ஏனடா?" கேட்டார் இராமசாமி.
"தினமும் ஏதாவது காரணம் கேட்டு,பழச சொல்லி சண்ட போட்டுக்கிட்டே இருக்கா.அக்கம்பக்கத்துல என் மானம் போது" கவலையுடன் கூறினான் திரு.

"என்னங்க" இலட்சுமியின் அழைப்பு.

சிறிது நேரத்தில் இலட்சுமியின் சத்தம் மேலோங்கியிருந்தது.பின் இராமசாமியின் சமாதானம் கேட்டது.
பின் வெளியே வந்த இராமசாமியிடம் "உங்களுக்கும் இதே பிரச்சினை தானா பெரியப்பா ?" நக்கலாக கேட்டான் திரு.

சிறிதும் சளைக்காமல் இராமசாமி திருவைப் பார்த்து"டேய் இந்த பிரச்சினை இப்ப யாருக்குதானில்ல ?? எதையுமே எடுத்தோம் கவுத்தோம்னு முடிவெடுக்க கூடாதுடா பையா.ஆமா நாங்க இப்ப சண்ட தான் போட்டோம்.ஒத்துக்கிறேன்.இதே மாதிரி தான் உன் வீட்டுச்சண்டையும்.அட நாம ஆம்பளைங்க.நாலு இடத்துக்கு போறோம்,பேசுறோம்,சிரிக்கிறோம்.ஆனா பொம்பளைங்க அப்படியா? வீட்டிலேயே இருக்கிற அந்த மன இறுக்கம் அவங்கள கோவப்பட வைக்கதா?சின்ன வயசுலேயே புருசன்ட எப்படி பேசுறது எப்படி நடந்துக்கிறதுனு சொல்லித்தராம பெத்தவங்க கட்டி வச்சிராங்க.அந்த பொண்ணு அங்க கஷ்டப்படுது.இதுவும் அவ மனச இறுக்குது.நாமும் பிள்ளைங்க முன்னாடியே சண்ட போடுறோம்.இதனால பிள்ளைகளும் புருசன்ட பொண்டாட்டி சண்ட போட்டா தப்பில்லைனு வளருதுங்க.எந்த பொண்ணும் பொறப்பால கோவக்காரி இல்லடா.சூழ்நிலைதா அவள மாத்துது.அவ கோவத்த ஆழமா பாத்தா உன் மேல இருக்குற பெரிய அக்கறை புரியும்.அவள புரிஞ்சிக்க.ஏதும் எதிர்த்து பேசாத.பொறுத்து கையாளு.எல்லாப்பிரச்சனையும் தீர்ந்திரும்."என்றார் பூரிப்பாக..

"பெரியப்பா அப்ப நாமதான் அனுசரிச்சு போனுமா? என்னதான் சொல்ல வரீங்க ?"

"டேய் அவ ஏன் இப்படி இருக்கானு பொலம்புறத விட்டுட்டு அவ இப்படிதான்னு உன் மனசுல பதிய வை.பின்ன அவள அன்பால உன் வழிக்கு கொண்டு வா "


"என்னங்க" மீண்டும் இலட்சுமியின் குரல்.
ஆனந்தமாய் உள்ளே சென்றார் இராமசாமி.


அவர் சொன்னதில் பாதி அவனுக்குப் புரியாவிடினும் ஒரு தெளிவுரை கிடைத்த திருப்தியில் வீடு சென்றான் திரு.

ஒருவாரங்கழித்து திரு வீட்டிற்குச்சென்ற இராமசாமி அங்கே அவன் தன் வீட்டில் குடியிருப்பவனுக்கு தான் கூறிய அறிவுரைகளை கூறக்கண்டார்,மேலும் தெளிந்தவனாய்,திருந்தியவனாய்,புரிந்தவனாய்..

எழுதியவர் : ஃபைஸ் அஹமது (9-Jun-15, 5:46 pm)
சேர்த்தது : ஃபைஸ் அகமது
Tanglish : aval abbadiththan
பார்வை : 412

மேலே