அவள் அப்படித்தான்
அவள் அப்படித்தான் !
அவள் அப்படித்தான்
அவள் அப்படி இல்லாவிடில் தான்
ஆச்சரியமே தவிர,
அவள் அப்படி இருப்பதில் இல்லை
எச்சில் பண்டமென குப்பைத்தொட்டிக்கு
வீசப்பட்டவள் - இன்று
இச்சை கொண்ட செந்நாய்களுக்கு
இரையாக இருக்கிறாள்
பணக்காரன் பரதேசி பாகுபாடெல்லாம்
இறைவனின் தரிசனத்திற்க்கு தானேயொழிய
அவளின்
தரிசனத்திற்கு ஏனோ இல்லை
வலிநோக புணர்ந்தால் அழுவதுமில்லை
வாஞ்சையாக தடவினால் மயங்குவதுமில்லை
அவள் அவளாகவேதான் இருப்பாள்
வயிற்றுப்பிழைப்புக்கென வாதாடவுமாட்டாள்
விதித்தது என பழி சொல்லவுமாட்டாள்
அவள் அப்படித்தான் !
பசிக்காக அழும் குழந்தையும்
சதைக்காக அலையும் ஆண்களும்
இருக்கும்வரை
அவள் அப்படித்தான் !
நவீன்சுப்பிரமணியம்