இயற்கை வாழ்வு

இயற்கை வாழ்வு
பாவலர் கருமலைத்தமிழாழன்
கூடிநின்றும் குறைந்துபோன வாதம் பித்தம்
கூறுகின்ற சிலோத்தமத்தின் தன்மை அளவை
நாடிதன்னைப் பார்த்துடலுள் வந்த நோயை
நன்றாகக் கணித்தன்று மருத்து வர்கள்
தேடிப்போய்ப் பறித்துவந்த மூலி கையால்
தெளிவாக நோய்வேரைப் பிடிங்கெ றிந்தே
வாடிநின்ற உடற்கெந்த பக்க நோயும்
வாராமல் காத்திட்டார் தமிழ்ம ருந்தால் !
இயந்கையினை அழித்ததாலும் சுற்று முற்றும்
இருந்திட்ட தூய்மையினைக் கெடுத்த தாலும்
செயற்கையுரம் மரபுமாற்றி விதைவி தைத்து
செழிப்பாக வளர்வதற்கு மருந்த டித்து
வயல்பயிரை நஞ்சாக்கி உண்ப தாலும்
வகைவகையாய் நோய்களினை இன்று பெற்றே
அயல்நாட்டு மருத்துவத்தைப் படித்த வர்கள்
அறைமுன்னே வரிசையாக நிற்கின் றார்கள் !
உறுப்புக்கு ஒருவராக மருத்து வர்கள்
உருவாகி வளர்ந்திட்ட மருத்து வத்தால்
பெருகிட்ட நோய்களினைத் தீர்ப்ப தற்கே
பெருஞ்செலவு செய்தபோதும் வேறு வேறாய்
உருமாறி வருவதினைத் தடுப்ப தற்கே
உணவேநம் மருந்தென்னும் முன்னோர் சொல்லை
திருமொழியாய் இயற்கையோடி யைந்த வாழ்வில்
தினம்வாழ்ந்தால் மருத்துவரே தேவை இல்லை !