எதைத்தேடி அலைகிறாய் மனிதா
எதைத்தேடி அலைகிறாய்
மனிதா...?
எதுவாவது கிட்டியதா
இதுவரை...
எது பயணிக்கும் உன்னோடு
இறுதிவரை...
முடிவற்ற தேடலில்
எது முடிக்கும்
உன்னாசையை...
நீ
இருந்தபோது
இறந்தவனாக
வாழ்ந்துவிட்டால்...
நீ
இறந்தபின்
உன் இருப்பினை
எது உணர்த்தும்...
நிசமற்ற அன்பு கோர்த்து
நிலையற்ற பொருள் குவித்து
நிலையில்லா உடலோடு
நிம்மதியை அடைந்தாயா...?
எது கொடுத்தாயோ
அதுவே கிட்டிடும்
உனக்கும்...
ஒரு எறும்பின் சேமிப்பில்
ஒரு தேனீயின் சேகரிப்பில்
எதைக் கற்றாய்
நீ...
இருப்பதை பகிர்ந்து பார்
இதயத்தை திறந்து பார்
இயற்கையை ரசித்து பார்
உன்
உள்ளும்... புறமும்
உயிர்ப்புகளை
உணர்ந்துவிட்டாயா...?
இன்னுமென்ன
தேடுகிறாய்...
உதவும் கரங்களாலே
உயிர் கொண்டு
உலவுது இவ்வுலகம்...
பிறரை நேசி
பிறவிகள் கடந்தும்
பயணிப்பாய் ...நீ...!
-------------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்