பொள்ளாச்சி அபி சிறுகதை திறனாய்வுப் போட்டி - இதுதான் விதியா

பொள்ளாச்சி அபியின் விழிப்புணர்வூட்டும் மற்றும் ஒரு சிறுகதை “இது தான் விதியா?”. பறவைகள் கூடு கட்டி வாழும் மரத்தை வெட்டி, அந்த மரத்தைக் கொண்டே, அந்தப் பறவைகளுக்கு கூண்டு செய்து தருவதுதான் வளர்ச்சி என்ற பெயரில் அரசின் திட்டங்களாக உள்ளன. இந்தக் கருவை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது அபியின் இந்தக் கதை.
கதை துவங்கும்போது அதன் நாயகி ஒரு பிச்சைக்காரி என்றே வாசகனை நினைக்கத் தூண்டுகிறது. ஒரு மரம் தான் இந்தக் கதையின் நாயகி என்பதை, சிறுகதையின் இறுதிப் பத்திகளில் மட்டுமே வெளிப்படுத்தியிருக்கும் பாங்கு வரவேற்கத்தக்கது.
மரத்தைச் சுற்றிப் படர்ந்திருக்கும் கொடிகள் போல, அதைச் சார்ந்து வளர்ந்த மனிதர்களின் வாழ்க்கை சித்தரிக்கப்பட்டிருக்கிறது. பல மனிதர்களின் வாழ்வின் ஏற்றத்துக்குக் காரணமாக இருந்த மரம், அரசாங்க அதிகாரிகளால் வெட்டப்படும் நிகழ்வு, “மரம் தான் மரம் தான் எல்லாம் மரம்தான், மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்” என்ற வைரமுத்துவின் கவிதை வரிகளை நினைவுபடுத்துகிறது.
“பேசாம..இந்த மரத்துக்கு கீழே ஏதாவதொரு சாமியை வெச்சுடுவோம்..அப்ப அதை எடுக்கணும்னா,அதிகாரிக யோசிப்பாங்கள்ளே..!” என்பது யதார்த்தத்தினைக் காட்டும் சாடல்.
“காக்கா எப்படிக் கத்தும்?”
கா...கா..
“மரம் எப்படிக் கத்தும்?”
மரம் கத்துவது மனிதர்களுக்குக் கேட்பதில்லை. அப்படிக் கேட்குமென்றால், மண்ணில் மரண ஓலம் ஓயாது.
கதையைப் படிக்கும் வாசகன் மனதில் ஆணி போல் அறையப்படுகிறது இந்தக் கருத்து.

“இது எனது சொந்தப் படைப்பு”

எழுதியவர் : சேயோன் யாழ்வேந்தன் (12-Jun-15, 7:25 pm)
பார்வை : 108

சிறந்த கட்டுரைகள்

மேலே