அறிவு கொண்டு எழு
தேடுகிறேன், தேடுகிறேன் - இன்னும்
தேடிக்கொண்டே இருக்கிறேன்.
எப்படி தொலைத்தேன்?
எப்பொழுது தொலைத்தேன்?
எங்கு தொலைத்தேன்?ஏன் தொலைத்தேன்?
அறிந்தே விட்டுக்கொடுத்தேனா?
இதை தொலைத்து வென்றது எதை?
பந்தமா? பாசமா? சுற்றமா? - அல்லது
பயமா? வெறுப்பா? சோர்வா?
தொலைத்த காரணம் யோசித்தால்,
பக்குவம், காலம், விதி என்கிறது மனம்.
தோற்றம் தொலைவது விதியினால், காலத்தால் - ஆனால்
உள்ளம் தொலைவது? பக்குவத்தினாலா?
என் உள்ளம் கொண்டதை பக்குவம் திருடியதா?
என்னுள் இருந்த அந்த இளம் பெண் எங்கே?
அந்த வீர பெண் எங்கே?
அந்த சாதனை பெண் எங்கே?
தொலைந்தது தெரியாமல் தொலை தூரம் வந்து விட்டேன்!
யோசிக்கிறேன்! இல்லை! இருக்க முடியாது!
பக்குவம் திருடவில்லை; அது அறிய செய்தது.
திருடியது அறியாமை!
அந்த பக்குவம் கொண்டு தேடுகிறேன் - மீண்டும்
கிடைத்தது எல்லாம், உள்ளத்தின் அடிவாரத்தில்!