வலியே வாழ்வு
அன்பு தோழமைகளுக்கு வணக்கம்..!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்த கவிதை ஊற்றின் மூலம் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்..! வலி எதுவாக இருந்தாலும் அதை சுமந்து கடப்பதில்தான் வாழ்வின் அர்த்தம் இருக்கிறது என்ற படிப்பினை உணரும் வண்ணம் இதோ என் கைவண்ணத்தில் எழுதியது..உங்களுடன் பகிராமல் உலகைவிட்டுப் போவேனோ..! தடுக்கி விழுந்தால் தாங்கும் கைகள் என் தமிழன்னை பெற்ற பிள்ளைகள்தானே..! மிக்க மகிழ்ச்சி..!
வலியின் உச்சம் சுகம்..!
காதலின் ஊடலில்
கண்ணிமை குடையாகும்..!
கருமையின் நடுவினில்
கண்விழி நிலவாகும்..!
விரல்களும் தடுமாற
விரதமோ வழிமாறும்..!
உதடுகள் துளிர்த்திட
உணர்வுகள் விதிமீறும்..!
உடலதின் உறவிலே
உயிரணு இணைந்திடும்..!
கலைந்திடும் முகவொளி
காலையில் சிவந்திடும்..!
கனவுகள் கலைந்தபின்
கருவது விதைந்திடும்
கணவனின் துணையதில்
கவனமாய் யிருந்திடும்..!
வலியது கூடித்தான்
வரவெனச் சொன்னானோ..?
வருவதும் போவதும்
வாழ்வெனச் செய்தானோ..?
இல்லறம் என்பது
இருவரின் அன்பில்தான்
ஆதாரம் வைத்துவிட
அழிவில்லை என்றானோ..?
வறுமையின் பிடியதை
வாடிக்கை யெனவைக்கும்
இயல்பெனும் இன்முகம்
இரும்பினும் மேலன்றோ..!
சிந்திப்போம்..!
வலியில்லையேல்
வாழ்வில்லை..!