பாட்டு ரசிக்கவில்லை
பட்டு நூல் இழையொன்று..
பறந்து வந்து என் மீது
மோதியதில் ஏற்பட்ட மென்மை..
உணர்ந்தேன்..
என் வீட்டின் முகவரி
என்னிடமே..
அவள் கேட்ட போது..!
சொல்லி விட்டு..
என்ன விஷயம் என்றபோது
அவள் சொன்னது..
வெள்ளியருவியில்..
கால் வைத்த உணர்வு..
என் வீட்டில்
குடி வரப் போகிறார்களாம்..
மெதுவாக உள்ளே சென்றேன்..
கூடத்தில் ..
அவள் அண்ணியுடன் ..
அவள்..
ஏறிட்டுப் பார்த்தாள்..
கண்டு கொள்ளாமல்
வெளியே வந்தேன்..
எங்கள் வீட்டு கிணற்று நீர்..
எந்த வெள்ளம் ..
எடுத்துப் போகும் இவளை..
நினைத்தது மனத் தவளை!
****
"இது ஒரு நிலாக் காலம்"
என்று பாடல் ..
பக்கத்தில் உள்ள டீக்கடையில்..
..
தம்பி..
ரேடியோ வால்யூமை
குறையுங்கள் என்றேன்..
எப்போதும் கொஞ்சம்
சத்தமாக வை என்பவன்..
ஏன்..இப்படி..இன்று..
என்று அவனும் விழிக்க...
அங்கிருந்து
எழுந்து நடந்தேன்..
..
நான்கு ஆண்டுகள்
என் வீட்டில் குடியிருந்து
வேற்றூர் போனவள்
இன்னும் என் மனத்தை
காலி செய்யாமல் இருக்கும் போது ..
எப்படி இந்தப் பாட்டு ரசிக்கும்?