புகைப்படம்
சில சிரிக்கச் சொல்லும்
சில அழச் சொல்லும்
இன்னும் சில
ரசிக்கச் சொல்லும் !!!
நம்மை விட்டு
நகர்ந்து போன நிமிடங்கள்
சொல்லியும் சொல்லாமலும்
சென்று விட்ட சொந்தங்கள்
அத்தனையும் அழகாய்
வாடாமல் பூத்திருக்கும்
பிறர் வந்து ரசிக்க
பூப்போல காத்திருக்கும் !!!
சில ஒன்றோடொன்று
சிரிப்போடு சேர்க்கப்படும்
சில இரண்டாகக்
கண்ணீரோடு பிரிக்கப்படும்
காரணம் கேட்டால்
கேட்பவர் கண்கள் கலங்கும் !!!
சில சுவர்களில்
வெளியரங்கமாய் தொங்க விடப்படும்
சில பர்சுக்குள் வைத்து
ரகசியமாய் ரசிக்கப்படும் !!!
சில உறவினிமித்தம்
சில நட்பினிமித்தம்
இதில் அத்தனையும்
அன்பினிமித்தம் மட்டுமே
உருவாயிருக்கும்
இன்னும் சில
பணி நிமித்தம் பிறந்திருக்கும் !!!
பணம் போல
பல அளவாயிருந்தாலும்
கை மாறாது இது
பொய் கூறாது இது !!!
பணம் கொண்டு
வாங்க முடியா
கடந்த காலத்தை
இது கொண்டு வாங்கலாம் !!!
அறுவது வயதுக்காரருக்கும்
இளமை திரும்பலாம்
பழமை ரசிக்கலாம் !!!
அன்பினால் அடுக்கப்பட்ட
அட்டை உறவுகள்
பின்னோக்கிப் பறக்கும்
ஞாபகச் சிறகுகள்
உன்னையே காட்டும்
உனக்கு முன்னாடி-இது
நினைவுக் கண்ணாடி !!!
இதயம் ஊடுருவும்
ஒளியின் கீற்றுகள்
அறுவடை செய்ய முடியா
ஞாபக நாற்றுகள் !!!
சிரிக்க வைக்கும்
அழ வைக்கும்
ரசிக்க வைக்கும்
உற்று நோக்க வைக்கும்
நீளத் திரைப் படமல்ல
சின்னப் புகைப் படம்
நெஞ்சுக்குள் புகையும் படம் !!!
இந்தப் புகைப்படமோர்
இருளின் அதிசயம்
ஒளியின் ஆச்சர்யம் !!!