பொள்ளாச்சி அபி சிறுகதைகள் திறனாய்வு போட்டி-அவள் அப்படித்தான்

சிறுகதை :அவள் அப்படித்தான்
ஆசிரியர் :திரு.பொள்ளாச்சி அபி ஐயா அவர்கள்

"அவள் அப்படித்தான் "எழுத்தில் நடைபெற்ற சிறுகதைப் போட்டி ஒன்றிற்காக அபி ஐயா எழுதியது....பொள்ளாச்சி அபி ஐயா அவர்களின் சிறுகதைகளை திறனாய்வு செய்யும் போட்டி என்ற போதே முதலில் எனக்கு நினைவில் வந்தது "அவள் அப்படித்தான் !".....

“ஒரு பொம்பளையா இருந்துகிட்டு,எத்தனை உசுரைக் கொன்னுருப்பா.., இவளுக்கெல்லாம் இந்த கெதி வராம...?”
“ஆண்டவன் ஏதோ பரிதாபப்பட்டு இதோட வுட்டானேன்னு..,பொழச்சா சந்தோசப் பட்டுக்கட்டும்..!”இப்படி பேசும் பெண்கள் ஆத்தாவின் இறைச்சிக் கூறுகளை தொட்டதில்லையோ?

ஆரம்ப வரிகளே காமாட்சி பாட்டி மீது ஏதோ ஒன்றை அழுத்தமாய்ச் சொல்ல வந்தது....கோபாலு காமாட்சி ஆத்தாவிற்கு உதவியாய் இருப்பவன் .....அவனுடைய ஞாபகங்களில் கதை ஆரம்பமாகிறது...


ஆடு வெட்டி இறைச்சி கடை நடத்தும் அறுபது வயசுக்காரியான காமாட்சி ஆத்தா ரத்தம் சொட்ட சொட்ட ஆட்டின் தலை அறுத்து பாகங்களைக் கூறு போட்டது அப்படியே நேரில் கண்டாற் போல் காட்சி பயத்துடன் விரிந்தது...


எங்க பரம்பரை தொழில் இது...இதை செஞ்சுதான் எங்க பையனை படிக்க வைத்து அரசாங்க வேலை வாங்கினோம் .இந்த தொழிலை செய்ய நான் ஏன் கேவலப் படனும் ?தங்கள் பையன் கைவிட்ட பின்னரும் தானே தன் குலத் தொழிலை சிரத்தையுடன் செய்து ஜீவித்துக் கொண்டது ஆத்தாவின் மேல் ஒரு பெரிய மரியாதையை உண்டு பண்ணியது....


நட்டத்திற்கு கணக்கு பார்க்காமல் மீதமிருப்பதை பகிர்ந்து கொடுத்து மன மகிழ்ந்த அவள் காய்கறிக் காரனோ துணிக்கடையோ நடத்துனரிடமோ எதிலும் எங்கும் கொண்ட நேர்மை ஆசிரியரின் எழுத்து ஆக்கத்தில் சிறப்பாய் தொடர்கின்றது...

“ஏண்டா..இந்தத் தொழிலு உனக்கு பாவமாத் தெரியுதா..? நெனச்சாலும் நெனச்சுக்கோ.. புண்ணியத்தை எப்பிடி சேக்குறதுண்ணு எனக்கும் தெரியும்..”

இந்த வரிகளைப் படிக்கும்போது

"உனக்கு விதிக்கப்பட்ட கடமையைச் செய்ய மட்டுமே உனக்கு அதிகாரம் உண்டு .செயல்களின் பலன்களில் உனக்கு அதிகாரம் இல்லை..உனது செயல்களின் விளைவுகளுக்கு உன்னையே காரணமாக ஒரு போதும் எண்ணாதே ..கடமையைச் செய்யாமலிருக்க ஒருபோதும் பற்றுதல் கொள்ளாதே!!"

என்ற பகவத் கீதையின் உபதேசங்களுக்கு ஏற்ப காமாட்சி பாட்டி வாழ்ந்ததை ஆசிரியரின் எழுத்துக்கள் பறைசாற்றுவதாய் என் எண்ணம்....

மூளைச் சாவில் இறக்கும்போதும் கூட அனாதையை தன்னை நம்பி இருந்த கோபாலுக்கு தன் வீட்டையும் சேமிப்பையும் எழுதி வைத்த காமாட்சி ஆத்தா தன் உடல் பாகங்களை தானம் அளித்ததில் உயர்ந்து நிற்கிறாள் கருணையில்!

உண்மையில் "அவள் அப்படித்தான் "வாசித்து முடித்த பின்னும் மனதில் தாக்கங்களை ஏற்படுத்திய மிகச் சிறப்பான படைப்பு...ஒரு படைப்பை படித்தோம் என்றால் அதன் கரு மனதில் ஏதாவது மாற்றத்தை உண்டு செய்ய வேண்டும்...

இறைச்சிக் கடைகளைக் கண்டாலே முகம் மாறும் எனக்கும் கூட அபி ஐயா அவர்களின் இந்த படைப்பை முதல் முறையாக படித்ததில் இருந்து எத்தனை காமாட்சி பாட்டிகள் தங்கள் கடமையை வெறுக்காமல் தங்கள் தொழிலை புனிதமாய் கருதி செயல்படுகிறார்கள் என்று மன நிறைவாய் புன்னகைக்கத் தோன்றுகிறது.....

பொள்ளாச்சி அபி ஐயா அவர்களின் அற்புதமான படைப்பு ஆற்றலும் பேச்சு வழக்கில் (எங்கள் ஊரில் பாட்டி "ஆத்தா "தான்)அமைந்த சிறப்பான நடையும் படைப்பை மனதிற்கு நெருக்கமாய் அழைத்துச் செல்கிறது.....எப்போதும் நெஞ்சை விட்டு நீங்காத உணர்வுகளின் உயிரோட்டமான சிறுகதை "அவள் அப்படித்தான்".....

அபி ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் இத்தகு சிறப்புமிக்க சிறுகதையினை வழங்கியமைக்கு......

அவள் அப்படித்தான் -வரம்.....

இது என் சொந்த படைப்பே-கார்த்திகா

எழுதியவர் : கார்த்திகா AK (16-Jun-15, 12:52 pm)
பார்வை : 119

மேலே