மானிட பாதையில்.......

இரவும் பகலும்
இயற்கையின் எழுத்து
இளமை முதுமை
மனிதனின் எழுத்து
இறப்பும் பிறப்பும்
இறைவனின் எழுத்து

இன்பம் துன்பம்
வாழ்க்கையின் எழுத்து
வந்தவன் அழுகின்றான்
வருபவன் அழுகின்றான்

வந்ததை எண்ணியே
வாழ்க்கையை தொலைக்கின்றான்
பருவம் அடைகின்றான்
பாவையை விரும்புகின்றான்

காதலின் வீதியிலே
கவிதைகள் பேசுகின்றான்
இளமையில் பறக்கின்றான்
இதயத்தை கொடுக்கின்றான்

இயற்கையின் ஊடலிலே
இன்பத்தை உணர்கின்றான்
காதலில் உறைந்தவன்
கண்ணீரில் மிதக்கின்றான்

உறவுக்குள் மலர்ந்தவன்
பிரிவினில் தவிக்கின்றான்
நம்பிக்கை இழந்தவன்
தன்னையே அழிக்கின்றான்

முயற்சியில் இருந்தவன்
முதலிடம் இருக்கின்றான்
பெண்ணை மணக்கின்றான்
பிள்ளைகளை பெறுகின்றான்

அன்பு உணவிலே
அறிவை சேர்க்கின்றான்
மதுவுக்கு மயங்குகின்றான்
மாதுக்கு மயங்குகின்றான்

மயக்கத்தின் முடிவிலே
மனசையும் வெறுக்கின்றான்
கடனுக்கு பணிகின்றான்
காசுக்கு பணிகின்றான்

கரங்கள் கடிக்கவே
கடவுளை தொழுகின்றான்
இதயம் உள்ளவன்
இரக்கம் காட்டுகிறான்

இளமையை முடித்தவன்
இருக்கையை தேடுகின்றான்
கடமையை மதித்தவன்
காரியம் பெறுகின்றான்
கடவுளை மறந்தவன்
கடைசியில் புலம்புகின்றான்.

எழுதியவர் : உடுவையூர் தர்ஷன் (12-May-11, 4:13 am)
பார்வை : 413

மேலே