வேதியியலில் ஓர் அரசியல்
எங்கும் வேதியியல் எதிலும் வேதியியல்...!!!
முழக்கங்கள் கேட்டு பெருமிதம் கொண்டது
வேதியியல் பொருட்கள் கூட்டம்,
தனக்குள் ஒருவனை தலைவனாக்கி விடவே
முடிவெடுத்தனர் அனைவரும் ஒன்று கூடியே
சிறப்பாய் தேர்தலை நடத்த கோரி
வந்தனர் தேர்தல் ஆணையத்திடமே
வேட்பு மனு தாக்கல் நடந்தது
அவைகளில் பல நீக்க பட்டது
வாக்கெடுப்பு தேதி அறிவிக்க கோரவே
ஹைட்ரஜனும்(2) ஆக்சிஜனும் ஒன்றாய் போனது
மூன்றும் ஒன்றாய் சேர்ந்து செல்லவே
ஆணையம் தண்ணீரில் மூழ்கி போனது
இந்த செய்தி கேட்ட அடுத்த நொடியிலே
ஆனந்தம் கொண்டு பித்தளை சிரித்தது
என் மனுவை அவர்கள் நிராகரித்ததே
இதற்கு காரணம் என்று சொன்னது
நல்லவன் ஒருவனை தலைவனாக்குவோம்
அவரவர் குணத்தை கொண்டதை தேர்வு செய்வோம்
என்றொரு குரலும் உரக்க கேட்க
அதுவே சரியென கூட்டம் தலை அசைத்தது
அனைவரின் குணத்தையும் ஆராய்ந்த பின்பு
வெள்ளியும் அமிலமும் இறுதி சுற்றை அடைந்தது
லஞ்சம் கொடுக்க முயன்றதன் காரணத்தால்
தங்கம் தகுதி இழந்து போனது
வெள்ளி தன் குணத்தை எடுத்து சொல்லவே
அனைவர் முன்பு மேடையேறி வந்து நின்றது
"ஏழை வீட்டு தங்கம் என்று என்னை அழைப்பர்
தன்னால் முடியுமட்டும் என்னை வாங்கி குவிப்பர்
ராசிக்கல் ஏதேதோ என்னில் பதிப்பர்
குடும்ப குத்துவிளக்கை என்னை கொண்டு செய்து வைப்பர்"
சுருக்கமாய் பேசி வெள்ளி விடை பெறவே
அமிலமும் பேசிட வாய் திறந்தது,
"கழிப்பறை சுத்தம் செய்ய பயன்படுவேனே
கிருமிகள் போக்கிட பாடுபடுவேனே
நம்மிலும் நச்சு கிருமிகள் வந்தால்
என் உயிர் தந்து அதனை அழிப்பேனே...
தன்னை விரும்பாத பெண்ணை சிதைக்கும் கொடுமையை
என்னை கொண்டு மனிதனும் செய்து கொள்வானே
இந்த பதவி கிடைத்தால் நானும் அதையே
நடவாது தடுத்து நிறுத்திடுவேனே.... !!!
என்று சொன்ன வண்ணம் மயக்கம் கொண்டதாய்
அமிலம் வெள்ளி மீது விழுந்தது
வெள்ளி அதனால் உருகி போகவே
எதிரியையும் உருக வைத்த நல்லவன் இவனென்ற
அனுதாப அலையில் அமிலம் வென்றது...
கண்ணீர் பேச்சும் சூழ்நிலைவாதமும்
சேர்ந்த உண்மை அரசியல் ஒன்று
இனிதாய்........ அங்கே ஆரம்பம் ஆனது...!!!