உனக்கென எழுதும் கவிதைகள்

என் அலைபேசியில்
உன் அழைப்புக்கென
வைத்த பாடல் ஒலித்து
வெகு
நாட்களாயிற்று...

நீ வருவாய் என இருந்த
எனது சனிக்கிழமைகள்
வெள்ளிகளோடும்
ஞாயிறுகளோடும்
முகம் திருப்பிக் கொள்கின்றன...

எப்போதாவது
கண் சிமிட்டும்
முகப் புத்தக அரட்டைப் பெட்டி
கண்கள் மூடி தியானித்துக்
கிடக்கின்றது.....

திடும்மென உன் அம்மாவின்,
அப்பாவின் அலைபேசியிலிருந்து
நீ பேசும்
உன் செல்ல குளறுபடிகள்
இன்றி என் அலைபேசி
புன்னகைக்க மறுக்கிறது ....

நீ அனுப்பிய
முயல் தேசங்களின்
வெயிலும் குளிரும்
வெறும் புகைப்படங்களாய்
மரணிக்கின்றன....

நீண்ட நினைவுகளில்
திரும்ப திரும்ப
திரும்பவும் உன்
ஞாபகங்களே எதிர் வருகிறது
உன் பிற்பகல் அழைப்பாய்.....

உன் ரகசிய மொழிக்குள்
இடைவிடாத சந்தம் தேடியே
முடியாமல் பாதியாகிறது
உனக்கென எழுதும்
கவிதைகள்....

கவிஜி

எழுதியவர் : கவிஜி (20-Jun-15, 2:40 pm)
பார்வை : 474

மேலே