கிளி மான் வேட்டை

குறைவில்லை
வயிறிற்கு
பாலும் பழமும் சோறும்
வேளா வேளைக்கு
சிறகிற்கு என்ன வேலை
எனக்கு என்றது கூண்டுக் கிளி !

அப்படியா
சிறகை வெட்டிவிடவா
என்றான் எஜமான்

சிறைக் கூண்டினில்
சிறகை வெட்டினால் என்ன
வெட்டாவிட்டால் என்ன
எனக்கு அந்த வானம் வேண்டும்
சிறகு விரித்துப் பறக்க வேண்டும்
சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும்
கூண்டை திறந்து விடு
என்னை சற்று பறக்க விடு
பின் உன் துப்பாக்கியால் சுட்டுவிடு !

அவ்வளவு ஆசையா
பறந்து போ என்று திறந்துவிட்டான்
துப்பாக்கியை எடுத்து குறி வைத்தான்

துப்பாக்கி திசை திரும்பியது
குறி தவறி சுவரில் இருந்த
மான் முகத்தைத் தாக்க
மான் முகம் கீழே விழுந்து
கொம்பொடிந்து கிடந்தது

துப்பாக்கியை திசை திருப்பி
பறவையை ஏன் தப்பிக்க விட்டாய்
என்றான் மனைவியிடம் கோபமாக

பறவை வானத்தில் வாழட்டும்
மனிதன் பூமியில் வாழட்டும் என்றாள்

ஆஹா இதோ பார்
கிளி வேட்டைக்குப் பதிலாக
மான் வேட்டை ஆட வைத்து விட்டாய்
என்னை என்றான் எக்காளமாக !

போகட்டும் ஏற்கனவே செத்த மான்
உயிரோடு இருக்கும் மான்களைத் தான்
மனிதன் வேட்டை ஆடக் கூடாது என்றாள் !
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (20-Jun-15, 4:11 pm)
பார்வை : 259

மேலே