தந்தை மனம் =தந்தையர் தினக்கவிதை

குடும்பச் சுமைதாங்கி கூன்விழும் போதும்
இடும்பைச் சகித்தில்லத் துள்ளே –அடுப்பு
எரிவதற்கு தன்னை விறகாக்கும் தந்தை
புரிகின்ற சேவை பெரிது.

பெற்றக் குழந்தைகள் பேரும் புகலோடும்
கற்றுத் தெளிந்து களங்கங்கள் –அற்றோராய்
நிற்கும் நிலைக்கு நிதமும் வழிகாட்டி
உற்றது செய்யும் உயிர்.

பிள்ளைகள் வாழ்வே பெருவாழ்வு என்றெண்ணி
உள்ளம் உருகி உழைத்துழைத்து –வெள்ளிப்
பணந்தேடி வேண்டுவன செய்யும் தகப்பன்
குணத்தின்கீழ் நின்றிடும் குன்று.

அலையலை யாக அலையும் அலையும்
அலைகடல் மேலே அலையாய் –அலையும்
நிலையுள வாழ்வில் நிலையாய் நிலைக்கும்
மலையது தந்தை மனம்.

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (21-Jun-15, 4:12 am)
பார்வை : 98

மேலே