தீக்குச்சி
என்
உயிரை விடுத்து
தீபத்திற்கு
ஒளி தருகிறேன்
ஆனால்
தீபம் உங்களுக்கு
வழிபடும் பொருள்
நான் வெறும்
கிழிபடும் பொருளே
*
நான்
பிறந்ததும் அடைப்படுகிறேன்..
ஆனால்,அந்தப்
பிஞ்சு விரல்களை
விட்டுவிடுங்கள் ..பாவம்!
*
நீங்கள்
உங்களைப் பற்றியே
கவலைப்படும்
சுயநலவாதிகள்
பக்கத்து வீட்டுக் கண்ணீரில்
குளிர்ந்து போகும்
குற்றப்பரம்பரையினர்
நானோ
பல வீட்டு அடுப்புகளை
எரிக்க முடியவில்லையே
என்ற ஏக்கத்தில்
அடைப்பட்டுத் தவிக்கிறேன்
நான்
ஈரமாய் அழுதால்
உங்களால் என்னை
உரைக்க முடியாது
*
நீங்கள்
பீடி பற்ற வைக்கும்போதும்
குடிசைகளை எரிக்கும்போதும்
என் சரிதை
சாபப்படுகிறது.
*
நீங்கள் பொதுவுடமைகளை
சிதைப்பீர்கள்
தனிவுடமைக்கு
வடம் இழுப்பீர்கள்
குப்பைகளை குவிப்பீர்கள்
பூக்களைக் கொளுத்துவீர்கள்
குறிஞ்சிகள் அழியும்போது
துடித்துப் போகும் நான்
நெருஞ்சிகள் எரியுமானால்
நெகிழ்ந்து சாவேன்
என்
வாழ்வின் தவம்
சாவில்
அர்த்தப்படவே ..!
*
உறைந்துபோன உறவுகளே,,
நீங்கள்
புது ரத்தம் பருகி - ஒரு
புரட்சி தீ வளர்ப்பதானால்
புறப்பட்டு வாருங்கள்
என்
கறுப்புக் கண்ணுக்குள்
ஒரு காட்டுத்தீயையே
சேமித்து வைத்திருக்கிறேன்
உங்களுக்காக ...! (1987)
(சிகரங்களை நோக்கிய சிறகடிப்புகள் " என்ற எனது கன்னி முயற்சி நூலிலிருந்து)