இரண்டழிவுகள்-ரகு

இனிதின் தேடலுக்குள்
----இன்றுகள் புதைகிறது
புனித ஸ்தலங்களுக்குள்
----பேதப்போர் மூள்கிறது
மனிதத் தலைகளிலோ
----மிருகங்கள் முளைப்பெடுக்க
மனிதம் மரிக்கிறது
----மடமை பிறக்கிறது

ஆறுகள் பாலையாகும்
----அவலங்கள் நீண்டிருக்க
வேருடன் மரங்களையும்
----வெட்டிக் களைந்துவிட
ஊருகளோ கல்லறையின்
----உருவம் பூண்டுகொள்ளக்
கூறுவீர்;மனிதர்காள்
----குற்றம் யாருகுற்றம்

வெள்ளிப் பனிமலைகள்
----வேருடன் பெயர்கிறதாம்
புல்லும் தீப்பிழம்பாய்
----புகைகக்கித் துளிர்க்கிறதாம்
அல்லும் பகலுமிங்கு
----அகிலம் வெந்துருக
சொல்லும் மனிதர்காள்
----சுயநலத் தேடலென்ன?

மனிதனோ இயற்கையழிக்க
----மனிதனை இயற்கையழிக்க
மணித்துளி யோடுமிங்கு
----மறவாமல் அழிவுங்கடக்க
பனிப்பிழை பொழியுதிங்கே
----பகட்டுகள் படருதிங்கே
தனித்துவக் குற்றம்பெருக
----தவவாழ்வும் வீழுதிங்கே

சுதந்திரம் சுதந்திரமென்று
----சுடரெனத் தீப்பந்தமேந்தி
வதந்தரும் நெருப்புமூட்டி
----வாழ்ந்திடத் துணிந்திட்டீர்
இதந்தரும் இயற்கையழித்தும்
----இனிதெனும் மனிதங்கொன்றும்
மிதந்திடும் மனிதர்காள் -நீவீர்
----மிதப்பதோ சாக்கடையில்!!

எழுதியவர் : சுஜய் ரகு (22-Jun-15, 6:31 pm)
பார்வை : 60

மேலே