ஊரிலிருந்து கணேஷ் மாமா

ஊரிலிருந்து
வந்திருந்தார்
கணேஷ் மாமா
செய்தித்தாள் சுற்றி
நூல் போட்டுக் கட்டப்பட்ட
திராட்சைப் பழங்களும்
காக்கி நிற
காகிதப் பொட்டலத்தில்
எண்ணை மினுங்கும்
மிக்சரும்
வாங்கிக்கொண்டு
பக்கத்துவீட்டில்
அரைப்படி
' நல்ல ' அரிசி
கடன் வாங்கிவந்த
அம்மா
அவரசமாகக் கடைக்கு
ஓடினாள்
அந்த வாரத்துக்கான
கடைசிப் பத்துரூபாயுடன்
மாமாவின் தயவில்
ரேஷன் அரிசிச்சோற்றிலிருந்து
தற்காலிக
விடுதலை பெற்ற
மகிழ்ச்சியில்
நானும் தங்கையும்
வெண்டைக்காய் சாம்பாரும்
முட்டைகோஸ் பொரியலும்
முடிந்து
ரசம் கொதிப்பதற்கும்
ஸ்டவ் அடுப்பில்
மண்ணெண்ணெய்
தீர்வதற்கும்
சரியாக இருந்தது

எழுதியவர் : குருச்சந்திரன் கிருஷ் (25-Jun-15, 9:11 am)
பார்வை : 1000

மேலே