இனிக்கும் காலம்-ரகு
தென்றல் போலவள்
தெருவில் வந்தாள்
திருட்டுத் தனமாய்த் திரும்புகிறேன்!
நின்றல் நடத்தல்
பேசுதல் சிரித்தல்
மொழிகள் பார்த்து அரும்புகிறேன்!
ஓரக் கண்ணால்
ஒருநொடி பார்த்தாள்
உலகைக் கைகளில் வாங்குகிறேன்!
தூரப் போனவள்
திரும்பிப் பார்க்கத்
துளிர்க்கும் காதலில் ஏங்குகிறேன் !
நிலவின் மகளாய்க்
கனவில் ஒளிர்ந்து
நெஞ்சின் இருளைப் போக்குகிறாய் !
மலரின் இதமாய்
மௌன அலையாய்
மார்பில் சுகமாய்த் தாக்குகிறாய் !
வெள்ளிக் கொலுசு
ஒலிக்கும் திசையை
வேடன் போலத் தேடுகிறேன் !
கள்ளிப் பாலால்
கதறும் சிசுவாய்க்
காதலை அருந்தி வாடுகிறேன் !
இருந்தும் காதல்
இனிக்கும் காலம்
எப்போ தென்னைச் சேர்ந்திடுவாய்!
மருந்தாய் உணவும்
கசந்தே இருக்கும்
மௌனம் கொஞ்சம் தூர்ந்திடுவாய்!
உன்னுள் எந்தன்
உலகம் சுற்றுதென
உயிரில் எழுதிக் காத்திருப்பேன்!
உன்னிலும் காதல்
உயிர்க்கும் அதுவரை
உன்வழி யெங்கும் பூத்திருப்பேன்!