அப்பாக்கள் தினம்

அப்பாக்கள் தினம்
==================================================ருத்ரா


என்னைக் கைகளில் ஏந்தும்போது
மேகங்கள் புகைச்சுருணையாய்
அவர் விரல் இடுக்கில் புசுபுசுத்தது.
மாணிக்கச் சதைப்பிழம்பு அவர்கையெல்லாம்
ஒளிக்குழம்பாய் வழிந்து பொங்கியதாய்
அவருக்குள் மகாப்பெரிய மகிழ்ச்சி.
இருப்பினும்
அழுகையின் ஒரு ஊளையொலி
அவர் இதழ்க்கடையில்..
திடீரென்று
அருகில் யாரும் இல்லையே
அந்த பிஞ்சு மண்ணுக்கு கேட்டுப் புரியவா முடியும்
என்று
வெறிபிடித்து கத்தினார்.
"உன் அம்மாவாம் அம்மா!
அவள் சொன்ன அந்த ஒரு சொல்
பொறுக்க முடியுமா?
எத்தனையோ மெகாடன் அணுகுண்டுசொல் அது..
யாருமே அழியவில்லையே.."
அப்புறம் அவர் மௌனத்தில்
ஆயிரம் ரிஷிகளின் தேஜஸ் தான்!
அது என்ன சொல்!
அம்மாவைக்கேட்டால்
அதை
"அம்மாக்கள் தின"த்துக்கு
ஒதுக்கி வைத்திருப்பாள்!
போகட்டும்.

என் அப்பா
என் பிஞ்சுவிரல் பிடித்து
எப்போதும் வியப்பு காட்டுவார்.
என்னவோ
ஆலன் குத் எனும் அமெரிக்க விஞ்ஞானி
மிச்சம் வைத்திருக்கிறாரே
ஒரு பிரபஞ்சக்கணக்கீட்டின்
அந்த "மிஸ்ஸிங் லிங்கை"
அந்த விரல் வெளியில் தேடுகிறாரோ?

நான் தூளியில் கிடக்கும் போது..
அம்மா அடுப்படி புகையில்
கண் அவிந்து கிடக்கும் போது..
கொஞ்சம் ஆட்டி விட்டு
அப்போதும் அந்த பிஞ்சுவிரலைத்தான்
தொட்டுத்தேடுவார்.
அவர் கரட்டுக்குரலில் தாலாட்டு பாட‌
ஏனோ தயக்கம்.
இருப்பினும்
"தூங்குடா கண்ணு"
என்று இதையே ஏற்றமும் இறக்கமுமாய்
இரக்கமாய் குரல் எழுப்புவார்.
வாய்ப்பு கிடக்கும் போதெல்லாம்
என் பிஞ்சு விரல் பிடித்துக்கொள்வார்.

அந்த விரல் தொடலில்
ஒரு வினா
இன்னும் தொட்டில் ஆடிக்கொண்டிருக்கிறது.
என் விரல் பிடித்து அவர்
நடக்க விரும்புகிறாரா?
அவர் விரல் பிடித்து நான்
நடக்கவேண்டும் என நினைக்கிறாரா?

இது
அவர் மீது ஏறும் கவலைகளின்
கனபரிமாணத்தைப்பொறுத்தது?

பாறாங்கல்லா?
அன்னத்தூவியா?
எதன் மேல் எது பளு?

அது இன்னும் புரியவில்லை.
வாழ்க்கையே அது தான் என்றும்
இன்னும் புரியவில்லை.
................
.....................

அப்பாக்கள் தினத்துக்கு
மகனே
இதோ எழுதித்தருகிறேன்.
வெளியிட்டு விடு.
என்று
பழுப்பேறிய கவரில்
அவர் எழுதி வைத்திருந்தது
துண்டு துண்டாய் கிடந்தது.
ஒட்டி ஒட்டி சேர்த்தது இது.

=======================================

எழுதியவர் : ருத்ரா (27-Jun-15, 3:54 pm)
Tanglish : appakkal thinam
பார்வை : 143

மேலே