இவன் வாழும் புது உலகம்

என்னடா இது?

என் விடியலும் புதிதாய்
வெளிச்சமும் புதிதாய்
பூக்களும் புதிதாய்
புவியும்கூட புதிதாய்

காற்றில் மாசில்லை
ஆற்றில் கழிவில்லை
ஓசோன் ஓட்டையெல்லாம்
ஒருபக்கமும் இங்கில்லை

அமிலம் பொழியும் மழையில்லை
ஆழி அலம்பும் சீற்றமில்லை
பூமி குலுங்கும் ஆட்டமில்லை

புகையில்லை மதுவில்லை
மாதுவில் களையில்லை
மனிதம் மிரட்டும் நோயுமில்லை

பசியில்லை பஞ்சமில்லை
பட்டினிச் சாவு எங்குமில்லை
வறுமையில்லை வசதியில்லை
வறுமைக்கோட்டிற்கு கீழ் எவருமில்லை

ஜாதியில்லை மதமில்லை
சமத்துவம்தான் இங்கு எல்லை
போரில்லை பகையில்லை
புதுவுலகம் இங்கு கண்டேன்

கொலையில்லை கொள்ளையில்லை
கொடுமைகள் எங்குமில்லை
கோவில் கூட இங்கில்லை

கட்சியில்லை சின்னமில்லை
கலர் கலராய் கொடிகளில்லை
தலைவனில்லை தொண்டனில்லை
மனிதரெலாம் மனிதனாய் கண்டேன்

லஞ்சமில்லை ஊழலில்லை
பணம் சுரண்டும் முதலையில்லை
பணமென்ற ஒன்றே இல்லை

காதலில் பொய்யில்லை
காமப் பேய்கள் இல்லை
பாலியல் தொல்லை தரும்
பாவிகளும் இங்கில்லை

மனிதனெது மிருகமெது
பிரித்தறியா உலகம் விட்டு
மனிதம் மட்டும் வாழுகின்ற
இவ்வுலகம் வந்து விட்டேன்

இன்னும் என்ன வேண்டுமடா?
இவ்வுலகம் போதுமடா

மனதோடு படியுங்கள்
மவுனமாக படியுங்கள்
இதழ் பிரித்து சத்தமிட்டு
இவன் கனவை கலைக்காதீர்
இவனுலகை பறிக்காதீர்..

எழுதியவர் : மணி அமரன் (29-Jun-15, 2:29 pm)
பார்வை : 141

மேலே