எங்கள் அடையாளம்

என் தேர்ச்சி சொல்லும்
அஞ்சலட்டையிலும்
அப்பா அம்மா
வாக்காளரட்டையிலும்
அரிசி மண்ணெண்ணெய்
வாங்கும் குடும்ப அட்டையிலும்
எங்களுக்கோர் அடையாளமாய்
எங்கள் வீட்டு முகவரி

வீட்டிலிருந்து
ஐந்து நிமிடம் நடந்தால்
வந்துவிடும் பள்ளி
எனக்கும் தங்கைக்கும்
பத்து நிமிட
மிதிவண்டி பிரயாணம்
அப்பாவின் தொழிற்சாலை

வேலியோரத்தில்
வைத்த தக்காளிச்செடி
பூக்களாய் பூத்திருந்தது
உச்சி நிலவும்
தென்னை மரம் மட்டும்
எஞ்சியிருந்தது
சுவரில் வரைந்த
தங்கையின் ஓவியத்தில்

வெள்ளைக் காகிதமும்
அகழ்பொறி சகிதமும்
வந்திருந்தனர்
கடமை தவறா
அரசு அதிகாரிகள்
தள்ளி விட்டால்
விழுந்துவிடும்
எங்கள் வீட்டு சுவரை
தள்ளி விட

பல்திரையரங்கை
உள்ளடக்கிய பேரங்காடி
வேகமாய் வளர்ந்தது
கண்ணீருக்கும்
கதறலுக்குமிடையே
புறம்போக்கென
தகர்க்கப்பட்ட எங்கள்
வீடுகளிருந்த இடத்தில்

நாங்கள்
வேண்டுவதெல்லாம்
எதிர்பாரா நடுநிசி ஒன்றில்
எங்கள் கொசுவலை சுவர்
அத்துமீறி எந்த குடிகார
நடிகரின் மகிழுந்தும்
வந்துவிடக்கூடாது
என்பதுதான்.


குறிப்பு:
பல்திரையரங்கு - மல்டிப்ளக்ஸ்
பேரங்காடி - ஷாப்பிங் மால்
அகழ்பொறி - Excavator, (பொக்லைன் என்று வழக்குமொழியில் பயன்படுத்துகிறோம்)

எழுதியவர் : தர்மராஜ் (29-Jun-15, 2:15 pm)
Tanglish : engal adaiyaalam
பார்வை : 189

மேலே