மரங்களும் - மனிதனும்

மரம், அவை பூமியின்
சுவாசங்களுக்கே உரம் !
இயற்கை கொடுத்த வரம்
ஆரோக்கியம் தரும்! என்றும்
அதுவே நிரந்தரம்!

தாயில்லாமல் தனியே வாழலாம் !
காயும் கனியுமின்றி வாழலாம் !
பாயும் புலியோடும் வாழலாம் !
காயும் வெயிலிலும் வாழலாம் ! பிராண
வாயு இல்லாமல் வாழமுடியுமா!

உனக்கு பிராணனை தந்து
உன் மூச்சுக் கழிவை சுவாசிக்கும்
சுமைதாங்கி அது! - இந்த
பூமிக் கருவில் உன் உயிர்
காக்கும் தொப்புள் கொடி அது !

மரமறுக்கும் மரங்களே - உன்
தாயின் கருவிலே உன்
தொப்புள் கொடி அறுந்திருந்தால் நீ
தப்பியிருப்பாயா!

அட சண்டாளா குடிநீரும் கிடைக்காதே
அதையுமா மறந்துபோனாய்!
மண் தழைக்க மழை!
மழை தழைக்க மரம் தேவைதானே !

உனக்கு கொடுக்கும் அவைகள்
உன்னிடம் என்னத்தைக் கேட்டது !
நீ இல்லாமல் மரங்கள் வாழ்ந்துவிடும் !
மரமில்லாவிட்டால் நீ மரித்துவிடுவாய் !

நீ அழிந்தால் உன் சொந்தம் அழும்
மரங்கள் அழிந்தால் வரும் சந்ததியே அழியும்!
எச்சரிக்கை! நீ வெட்டுவது மரத்தையல்ல
வரும் சந்ததியின் நுரைஈரலையே வெட்டுகிறாய்!

முடிந்தால் விதை! அல்லது விட்டுவிடு
பூ அறு! காயும் கனியும்கூட அறு!
நிழலுக்கு ஒதுங்கிய நீ அதன்
கழுத்தை அறுக்காதே !

நீ வேறு அவை வேறுதான்
அதன் வேறு உன் முச்சுதான்
என்பதை மறந்துவிடாதே!

நன்செய் நிலத்தை விற்பது
நல்ல பெண்ணை பலாத்காரம்
செய்வதற்கு சமம் !

விளைச்சல் பூமியிலே வீடு கட்டுவது
வெள்ளிதட்டிலே மண்ணைக்
கொட்டித் தின்பதற்கு சமம் !

பாரத தேசமே ! உன்
முதுகெலும்பைப் பற்றி சிந்தித்து
பாராத தேசமே !

முதலுதவி தேடும் விவசாயத்துக்கு !
அவசர சிகிச்சை தாமதிக்காமல் செய் !
முடியாமல் தள்ளாடும் விவசாயியை
தலை நிமிர வை ! தேசமும் தலை நிமிறும்!

எழுதியவர் : கவிஞர் சமூக ஆர்வலர் அலெக் (2-Jul-15, 10:00 am)
பார்வை : 1401

மேலே