மனிதாபிமானம்

காலங்காத்தாலேயே
தண்ணியப் போட்டுட்டு
கிடக்கிறான் பார்...
சாலையோரம் கிடந்தான்
ஒரு ஐம்பது வயதுக் காரன் ..
ஏறிட்டும் பார்க்காமல்
நடந்தோம் நானும் நண்பரும்...


இப்படித்தான்
கிடந்த ஒருவனை
என்னவோ ஏதோவென்று
உதவப் போன எங்களுக்கு
கொஞ்ச நாள் முன்பு கிடைத்தது
போதை தெளியாத அவனின்
வாயில் மிஞ்சியிருந்த
கெட்டவார்த்தைகளும்
அக்கம்பக்கத்தாரின்
ஏளனப் பார்வைகளும்..

திரும்பிவரும்போது
நூற்றியெட்டு ஊர்தியில்
ஏற்றிகொண்டிருந்தார்கள்..
அம்பது வயதுக் காரனை ..
ஊரிலிருந்து வந்த சித்தப்பா..
காலையில் நடக்க போனவர்
காணமேன்னு வந்து பார்த்தால்..
ரத்த அழுத்த நோய்க்காரர் ..
இளைஞன் ஒருவன்
யாரிடமோ சொல்லிக்கொண்டே
வண்டியில் ஏறுகிறான்..

எத்தனை பேர்
கடந்து போயிருப்பாங்க..
ஒருத்தருக்கும் உதவணுன்னு
தோணலே பாருங்க..
மனிதாபிமானம்
தொலஞ்சு போச்சு..
கூட்டத்தில் ஒருவன்..

எழுதியவர் : ஜி ராஜன் (2-Jul-15, 3:45 pm)
பார்வை : 138

மேலே