வாழவேண்டும் வண்ணத்துப் பூச்சியாய்
கொக்கரிக்கும் சேவலது
கொன்று குவித்த இரவதனை
கொள்ளிக் கட்டைதான் பிடித்து
கொள்ளி வைத்த கதிரவனே...
கண்ணீர் விட்டு கதராமல்
கனலை கக்கி கதரினாயோ
கட்டியிருந்த நீல சேலைதனை
கவ்வி கொண்ட தழலது..
வேப்பமர சல்லடையை
வேகமாக கடந்து வந்து
சாளரத்துள் நுழைந்ததோடு
சரசம் செய்ய பார்ப்பதென்ன...
தழுவி கிடந்த இமையிரண்டும்
தள்ளி விட்டு பிரிஞ்சி செல்ல
கருவிழியோடு கதிரவனும்
சரசம் செய்ய துணிஞ்சதென்ன...
பஞ்சுமில்லை நெருப்புமில்லை
பற்றி எரிய வழியுமில்லை
படலமாக படர்ந்திருந்த
பனிபுகைய என்ன சொல்ல...
கார்மேகம் தான் கண்டு
மெய்சிலிர்க்கும் மயில் போல
பனிப்படலம் தான் கண்டு
மயிர்கால்கள் சிலிர்த்ததென்ன...
பசுங்கடலாய் விரிந்திருந்த
பச்சைபசேற் வயல்வெளியைப்
பக்குவமாய் மீட்டுப் போகும்
பனிக்காத்து நாசி புக...
அச்சென்ற தும்மலோடு
அம்மாவை நானழைக்க
தேநீர் கோப்பையுடன்
தேவதையாய் வந்ததென்ன...
சாளரத்தின் வழியாக சாஞ்சி நானும்
பாக்கயில கையோடு கைகோர்த்து
கதைபேசும் தென்னங்கீத்த கண்டுபோன
காகமெல்லாம் கரையுதம்மா தாளாம...
தென்றல் கொஞ்சம் தீண்டிடவே
தேன் சுமந்த இதழ் மலர
வண்ணக் கோலம்தான் பூண்டு
வாசனையாய் அலர் சிரிக்க...
சிதறி விழுந்த ஞாயிறாய்
செஞ்சுடரின் பாகமாய்
சிவந்து திரண்ட மாங்கனியை
கொத்தி தின்ற இருகிளிகள்...
நாசிமீது நாசி முட்டி
கொஞ்சி கொஞ்சி களித்திருக்க
கண்டு கொண்ட வஞ்சிக்கண்ணம்
சிவந்து அலர்ந்த தாமரைமலரோ!..
காணி நிலம் நடுவினிலே
கால் பதித்து நடக்கையிலே
காத்தோடு காத்தாக
கரைந்துபோன கவலையெல்லாம்...
வஞ்சம் கொண்டு பகை
வளர்க்கும் பசுஞ்சோலை தன்னோடு
வாஞ்சையோடு வாழ்வனைத்தும்
வாழவேண்டும் வண்ண(த்து)ப் பூச்சியாய்....
~கிருஷ்ணநந்தினி.