கொலையாளி-1 க்ரைம் சிறுகதை

................................................................................................................................................................................................

காலை ஒன்பது ஐம்பதுக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு முன் பளபளப்பான ஆடி (audi) கார் வந்து நின்றது. காரிலிருந்து யூனியன் க்ராஃப்டைன் நிறுவனத்தின் மானேஜர் ஜேம்ஸ் இறங்குவதற்குள் அவர் பூசியிருந்த வெளிநாட்டு வாசனைத் திரவியம் நாசியைத் தாக்கியது. தன் காரியதரிசி பின்தொடர காவல் நிலையத்துக்குள் நுழைந்தவரை வரவேற்றார் இன்ஸ்பெக்டர் திவாகர்.

“வாங்க மிஸ்டர் ஜேம்ஸ் ! கமிஷனர் சொல்லியிருந்தார். உங்களுக்கு உங்க பிசினஸ் பார்ட்னர்ஸ் மூணு பேரால உயிருக்கு ஆபத்து வரும்னு நீங்க சந்தேகப்படுறதா எங்க கிட்ட சொன்னார். என்ன உங்க பிரசினை?”

ஜேம்ஸ் வந்து உட்காரவும் அவருக்கு ஸ்பெஷல் காப்பி கிடைத்தது. தன் பிரீஃப் கேஸை டேபிளில் வைத்தவர் அதன் பக்கத்தில் அன்றைய வார பிசினஸ் டுடே பத்திரிக்கையையும் வைத்தார்.

“ சார், ரோஜர், வினய், சம்பத் - இந்த மூணு பேருமே என்னோட பிசினஸ் பார்ட்னர்ஸ். இவங்களோட போட்டோ, மத்த விவரங்கள் இந்த ஃபைல்ல இருக்கு. சமீப காலமா இந்த மூணு பேருமே எனக்கெதிரா சதி செய்றாங்க. இவங்களால என் உயிருக்கு ஆபத்து வந்துடுமோங்கிற பயமும் எனக்கு இருக்கு. அதிலும் முக்கியமா இந்த சம்பத்; இவன் வீடு என் ஏரியாவுக்குப் பக்கத்துல வடபழனியிலதான் இருக்கு. போன வாரம் எனக்கும் இவனுக்கும் சண்டை வந்து அத்தனை ஸ்டாஃப் எதிர்லயும் என்னைக் கொல்லாம விட மாட்டேன்னு மிரட்டிட்டான். கமிஷனர் என் நண்பர்ங்கிறதால நேத்து இதைப் பத்தி அவர் கிட்ட பேசினேன். எதுக்கும் சம்பிரதாயமா நம்ம ஏரியா போலிஸ் ஸ்டேஷன்ல ஒரு புகார் கொடுக்கச் சொன்னார். அதான் வந்தேன்.... ”

தயாராய் எடுத்து வைத்திருந்த புகாரை எடுத்து நீட்டினார்.

“ உங்க வீடு வளசரவாக்கமா சார்? ” திவாகர் கேட்டார்.

“ ஆமா சார். வீட்டுல நான் மட்டும்தான் இருக்கேன். செக்யூரிட்டி, வேலைக்காரன், அந்தரங்க காரியதரிசி எல்லாம் இருக்காங்க. குடும்பமில்லே. மனைவி காலமாயிட்டா. ஒரே பொண்ணு ஆஸ்திரேலியாவுல செட்டில் ஆயிட்டா. நான் வீட்டுல தங்குறது சில முக்கியமான ஃபைல்களை பார்க்கவும், முடிவெடுக்கவும்தான்...! மற்றபடி நிறைய நாள் ஹோட்டல்ல தான் தங்குவேன்... வீட்டுல இருந்தாலும் ஹோட்டல்லேர்ந்து வரவழைச்சு சாப்பிடுறதுதான்... “

“ உங்களுக்கு போலிஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யலாமா? ”

“ இல்ல இன்ஸ்பெக்டர்.. உங்க வேலைப்பளு எனக்கும் தெரியும். நாளைக்குக் கூட சிட்டியில ஒரு நிகழ்ச்சிக்கு போலிஸ் பந்தோபஸ்து நீங்கதானே செய்யணும்? நான் ஒரு பிரைவேட் செக்யூரிட்டிய அரேன்ஞ் பண்ணிட்டேன். நாளையிலேர்ந்து டியூட்டி ஜாயின் பண்ணிடுவார். இந்த ஃபோட்டோவை பாருங்க - இவர்தான் அந்த செக்யூரிட்டி.. நீங்க அப்பப்ப இவர் கூட கோ ஆர்டினேட் பண்ணிட்டா போதும்- ஒரு ரெண்டு மாசத்துக்கு...! அப்புறம் நான் இந்தப் பசங்களை கணக்கு தீர்த்துட்டு வெளிநாடு போயிடுவேன்....! அது வரைக்கும் என் மேல கொஞ்சம் கண் வைங்க... அதச் சொல்லத்தான் வந்தேன்.. ”

“ இவர் பேர் பாபுதானே. இவர் மேல தனிப்பட்ட முறையில எனக்கு நல்ல அபிப்பிராயம் உண்டு. நல்ல ஆளைத்தான் பாதுகாப்புக்கு ஏற்பாடு பண்ணியிருக்கீங்க....! ”

ஜேம்ஸ் சிரித்தபடி எழுந்து கொண்டார்.

இன்ஸ்பெக்டர், ஜேம்ஸை பற்றி இரண்டு நிமிடம் சிந்தித்தார். இந்த ஜேம்ஸ் பங்குதாரர்களை ஏமாற்றி லாபத்தை அமுக்குவதில் சமர்த்தர் என்று கேள்விப்பட்டிருக்கிறார். கமிஷனருக்குத் தெரிந்தவர். அவர் வந்ததையும் சொன்னதையும் அலைபேசியில் கமிஷனரிடம் தெரிவித்தார் இன்ஸ்பெக்டர்.

“ அப்படியா, அவரே செக்யூரிட்டிய அரேன்ஞ் பண்ணிட்டாராமா? சரி,சரி.. ” ஜேம்ஸ் விவகாரத்தை அத்தோடு நிறுத்திய கமிஷனர் அடுத்த நாள் நிகழ்ச்சி பற்றி விசாரிக்க ஆரம்பித்து விட்டார்.

அடுத்த நாள் அதிகாலை ஐந்தரை மணிக்குப் பரபரப்புத் தகவல் வந்தது.

“ சார்..! சார்..! ஜேம்ஸ் சார் வீட்டு வேலைக்காரன் பேசறான், ஜேம்ஸ் சார் அவர் படுக்கையில செத்துக் கிடக்கிறாராம்..! ”

வளசரவாக்கம் வீட்டில் போலிஸ் முகாமிட்டது.

அதிகபட்ச ஏசியில் கிடந்தது ஜேம்ஸின் சடலம். ஆடையில் லேசான மது வாடை. உறுதியான நைலான் கயிறு போன்ற சமாச்சாரத்தால் கழுத்து நெரிபட்டு இறந்திருக்கிறார். சடலம் குளிர்ந்து ரத்தம் உறைந்திருந்தது. இதைத் தவிர உடலில் வேறு எந்த மாற்றமும் இல்லை. சட்..! குளிரூட்டப்பட்ட அறையில் இதுதான் சோதனை. செத்த நேரத்தை சரியாகக் கணிக்க முடியாது...!

வேலைக்காரன் வெளிப்புற சிட்-அவுட்டில் படுத்திருந்தவன் விடிந்ததும் அறையை எட்டிப் பார்த்திருக்கிறான். மற்றபடி வீட்டு எஜமானர் எப்போது வீட்டுக்கு வந்தார் என்றே அவனுக்குத் தெரியாது...! அவன்தான் சடலத்தை முதலில் பார்த்தவன்.

கேட்டில் நின்றிருந்த வாட்ச்மேனுக்கு தலையில் அடிபட்டிருந்தது. இரவு பதினோரு மணியளவில் யாரோ பின்மண்டையில் அடித்ததாகச் சொன்னான். அப்போது கார் வந்த சத்தமும் கேட்டதாகச் சொன்னான். அடித்தவன் திடகாத்திரமாக இருந்திருக்க வேண்டும்... காவலாளியை மயங்க வைக்கிற அளவுக்கு அடி பலமாகத்தான் இருந்தது. அடித்தவனை பார்க்க முடியவில்லை என்றான் வாட்ச்மேன்.

ஜேம்ஸின் உடலை பரிசோதனைக்கு அனுப்பினார் இன்ஸ்பெக்டர் திவாகர். ஆஸ்திரேலியாவில் இருக்கும் அவரின் ஒரே மகளுக்கும் தகவல் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இன்றைக்குத்தான் இவர் நியமித்த பிரைவேட் செக்யூரிட்டி வருவதாக ஏற்பாடு. அதற்குள் இப்படி கொலையுண்டு கிடக்கிறாரே.

திவாகர் ஜேம்ஸின் அறையை சென்டி மீட்டர் சென்டி மீட்டராக பரிசோதித்தார். பொருள்கள் இறைந்து கிடந்தன. இரண்டொரு மேஜை நாற்காலிகள் விழுந்திருந்தன. எங்கேயும் கைரேகையில்லை. திருட்டுப் போன அடையாளமும் இல்லை. ஜேம்ஸின் பிசினஸ் டுடே பத்திரிக்கை மேஜையில் கிடந்தது. பத்திரிக்கையை மெதுவாகப் புரட்டினார். இது என்ன? ஹூம்..! குற்றவாளி என்னதான் புத்திசாலியாகச் செயல்பட்டிருந்தாலும் சின்ன விஷயத்தில் சொதப்பி விடுகிறான்.

பிறகு வீடு முழுதும் சுற்றி வந்தார்...!

கமிஷனர் ஃபோன் செய்தார், “ என்ன திவாகர், இப்படி ஆயிடுச்சி? அந்த பிசினஸ் பார்ட்னர்ஸை- முக்கியமா அந்த சம்பத்தை கஸ்ட்டியில் எடுங்க ! ஜேம்ஸ் பயந்த மாதிரியே நடந்துடுச்சே? ”

திவாகர் அமைதியாகப் பேசினார். “ சார், சம்பத்தோ, மற்ற பிசினஸ் பார்ட்னர்ஸோ அவரைக் கொலை செய்ய வாய்ப்பில்லை ” என்றவர், பிசினஸ் டுடே பத்திரிக்கையில் தனக்கு கிடைத்த ஒரு தடயத்தைப் பற்றி சில நிமிடம் பேசினார். “ ஒரு மணி நேரம் டைம் கொடுங்க சார். குற்றவாளியைக் கண்டு பிடிச்சு அரெஸ்ட் பண்ணிடறேன்! ”

திவாகர் விசாரணையைத் தொடர்ந்தார்.

பாயிண்ட் நம்பர் ஒன்று. கார் வந்த சமயமும் வாட்ச்மேன் அடிபட்ட சமயமும் ஒன்று. காரில் வந்தது ஜேம்ஸ் என்றால் தன்னுடைய வாட்ச்மேனை தானே அடிக்கிற அவசியம் அவருக்கு இல்லை. ஜேம்ஸ் இந்த வீட்டில் கொலை செய்யப்படவில்லை. எங்கேயோ கொலை செய்யப்பட்டு அவர் சடலம் கொலைகாரனால் இங்கு கொண்டு வந்து போடப்பட்டிருக்கிறது.

2. ஜேம்ஸின் தொழில் முறைக் கூட்டாளிகள் அவரைக் கொல்லவில்லை. ஆள் வைத்துக் கொல்லவும் வாய்ப்பில்லை. ஏனெனில் இன்று நகரத்தில் நடைபெற உள்ள முக்கிய நிகழ்ச்சியை முன்னிட்டு ஊரிலுள்ள ரௌடிகளை ஏற்கெனவே கைது செய்தாயிற்று. வெளியாட்களின் நடமாட்டமும் கண்காணிக்கப்பட்டிருக்கிறது.

3. இது திட்டமிட்ட கொலையல்ல. உணர்ச்சி வேகத்தில் செய்யப்பட்ட கொலை.

4. கொலைகாரன் ஜேம்ஸுக்கு மிகவும் பரிச்சயமான, அவரின் பிரத்தியேகப் பொருள்களை சுளுவாகக் கையாளும் அளவுக்கு உரிமை படைத்தவன்.

5. திடகாத்திரமானவன். கழுத்தை நெரித்துக் கொல்ல உயரமும் தசை பலமும் வேண்டும். ஆக, அது ஒரு ஆணாக இருக்க வாய்ப்பு அதிகம்.

6. ஜேம்ஸுக்கும், அவருடைய பங்குதாரர்களுக்கும் இருக்கிற முன் விரோதம் கொலைகாரனுக்குத் தெரிந்திருக்கிறது. அது தனக்குச் சாதகமாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருப்பான். அதனால் அவ்வளவு சீக்கிரம் தலைமறைவாக மாட்டான்.

ஜேம்ஸின் அலுவலர்களும் நண்பர்களும் பட்டியலிடப்பட்டு அலைபேசியிலேயே தொடர்பு கொள்ளப்பட்டனர். அதற்குள் டிபன் சாப்பிடும் நேரம் வந்து விட்டது. இன்ஸ்பெக்டர் பசியோடு விசாரிப்பதைப் போல் சப்-இன்ஸ்பெக்டருக்குத் தோன்றியது. ஏனெனில் கிட்டத்தட்ட எல்லோரிடமும் காலையில் என்ன டிபன், நேற்றிரவு உங்கள் வீட்டில் என்ன டிபன் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

திடீரென்று திவாகர் எழுந்து கொண்டார். ஜேம்ஸின் அந்தரங்கக் காரியதரிசியான பாலச்சந்தரை சந்திக்கக் கிளம்பினார்.

பாலச்சந்தரின் வீடு புரசைவாக்கத்தில் இருந்தது. வீட்டின் செழுமை வருமானத்தை மீறியிருந்தது. சப்-இன்ஸ்பெக்டரிடம், வெளியே வந்த பாலச்சந்தரை மொபைல் ஃபோனில் போட்டோ பிடிக்கச் சொன்னார் திவாகர். அதற்கே பாலச்சந்தரின் முகம் வெளிறியது.

பாலச்சந்தரை எக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார் இன்ஸ்பெக்டர். வரவேற்பறை மேஜையில் புல்கா- மேக்கர் ஒன்று இருந்தது. அதாவது சுவிட்சு போட்டால் காயில் சிவந்து வெப்பத்தால் பொரிய வைக்கும் ஒரு எளிய சமையலறை சாதனம். ரோடி மேக்கரில் வட்ட வட்டமாக சப்பாத்தியும் இடலாம்; பொரிக்கவும் செய்யலாம். புல்கா மேக்கரில் சப்பாத்தி தட்ட முடியாது. ஏற்கெனவே இட்டு வைத்திருக்கும் சப்பாத்திகளை எண்ணெயின்றி பொரிக்கலாம். நேரிடையாக தணலில் வாட்டி எடுக்கும் சப்பாத்திக்குப் பெயர்தான் புல்கா. இங்கு புல்கா- மேக்கரின் மேல் சாப்பிட நாதியின்றி ஒரு புல்காவும் உட்கார்ந்திருந்தது....

“ சார்... சார்... ” என்று பதறிய பாலச்சந்தரிடம் திவாகர் கேட்ட முதல் கேள்வியே இதுதான்:

“ எதுக்குடா உங்க பாஸ் ஜேம்ஸை நீ கொன்னே? ”

“ இல்ல சார், இல்ல சார்,,! என்னோட பாஸை நான் எதுக்கு சார் கொல்லணும்? ”

“ ம்..ம்... ” திவாகர் அவனையே பார்த்தார்.

“ ராத்திரி உங்க பாஸ் ஜேம்ஸ் உன் வீட்டுக்கு வந்திருக்கார். அதோ அந்த மேஜையில அவரோட பிரீஃப் கேஸையும் பிசினஸ் டுடே பத்திரிக்கையையும் வச்சிருக்கார். இதோ இந்த சோபாவுல உட்கார்ந்துதான் பேசியிருக்கார். நீ அப்ப சப்பாத்திக்கு மாவு பிசைஞ்சுட்டு இருந்திருக்கே. சப்பாத்திய தேய்ச்சு பக்கத்துல இருந்த பிசினஸ் டுடே பத்திரிக்கைக்குள்ள வச்சிருக்கே. அப்புறம் உங்களுக்குள்ள சண்டை வந்துருக்கு. நைலான் கயித்தால அவர் கழுத்தை நெரிச்சிருக்கே. சடலத்தை கொண்டு போய் அவர் வீட்டுலேயே போட்டிருக்கே; வாட்ச்மேனையும் தாக்கியிருக்கே, சரிதானே? எதுக்கு ஜேம்ஸை நீ கொலை பண்ணேன்னு சொல்லு? ”

அதற்குள் சப்-இன்ஸ்பெக்டர் வளசரவாக்கம் தாண்டி ஒரு சிக்னலின் சிசி காமிரா பதிவுகளை ரெகார்ட் பண்ணி கொண்டு வந்தார். ஜேம்ஸின் கார் அந்த சிக்னலைத் தாண்டுகிறது. அப்போது மணி சரியாக இரவு பத்து ஐம்பத்திரெண்டு. டிரைவர் ஆசனத்தில் தெரிந்தவன் பாலச்சந்தர்.

பாலச்சந்தர் வேறு வழி தெரியாமல் திருதிருவென்று விழித்தான்.

இன்ஸ்பெக்டரின் பளார் அறை அவனை வாய் திறக்க வைத்தது.

“ சார், ஜேம்ஸை கொலை செய்தது நான்தான். ஜேம்ஸுக்கு பெண் சபலம் உண்டு. அவர் காட்டுற பொண்ணுங்களை பணம் கொடுத்தோ, பலவந்தப்படுத்தியோ, மிரட்டியோ- அவர் படுக்கையறைக்கு அனுப்பி வைப்பேன். அந்த வகையில அவருக்கும் எனக்கும் ஒரு நெருக்கமிருந்தது. அதுக்காக ஜேம்ஸ் எனக்கு நிறையப் பணம் தருவார்.

எனக்கு ஹோட்டல் சாப்பாடு ஒத்துக்காது சார். அன்னைக்கு நீங்க சொன்ன மாதிரி நான் சப்பாத்தி ரெடி பண்ணிட்டிருந்தேன். அப்பத்தான் ஜேம்ஸ் என் வீட்டுக்கு வந்தார். ஒரு பொண்ணு வேணும்னு கேட்டார். அவர் கேட்ட பொண்ணு என் காதலி சார்...!

அவ வேணாம்னு நான் கெஞ்சினேன். நான் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணுன்னு சொன்னதுக்கு அப்புறம் அவர் முன்னை விட ரொம்ப பிடிவாதம் பிடிச்சார்.. என்னையும் அவளையும் அசிங்க அசிங்கமா பேசினார்..... எனக்கு ஆத்திரம் வந்துடுச்சு. மேஜை டிராயர்ல நைலான் கயிறு வச்சிருந்தேன். ஒரே நெரி; ஆள் அவுட். ..! ”

“ நல்ல நியாயம்தான்” என்றார் திவாகர். “ ஊரான் வீட்டுப் பொண்ணை கூட்டிக் கொடுத்த போது ஒண்ணும் தெரியல. உனக்குச் சொந்தமாகப் போகிற பொண்ணுன்ன உடனே ரத்தம் கொதிச்சுடுச்சாக்கும்? ”

பாலச்சந்தர் தலை குனிந்தான். “ தப்புதான் சார். பக்கத்துல டாஸ்மார்க் போய் ஒரு குவார்ட்டர் வாங்கிட்டு வந்து அவர் வாயில, சட்டையில எல்லாம் ஊத்தினேன். அவர் காருலயே அவரையும் அவர் பொருள்களையும் தூக்கிப் போட்டுட்டு வளசரவாக்கம் வீட்டுக்குப் போனேன். வாட்ச்மேனை நான்தான் அடிச்சேன். போலிஸ் சந்தேகமெல்லாம் அவரோட பிசினஸ் பார்ட்னர்ஸ் மேல திரும்பும்னு நினைச்சேன். நீங்க எப்படி சார் என்னை...? ”

திவாகர் விளக்கினார். “ நீ சமர்த்தாதான் பிளான் பண்ணியிருக்கே, இதை எடுக்க மறந்திட்டியே? ”

இன்ஸ்பெக்டர் காட்டிய பொருளை சப்-இன்ஸ்பெக்டரும் எட்டிப் பார்த்தார். கொலை நடந்த இரவன்று ஒவ்வொருத்தர் வீட்டிலும் என்ன டிபன் என்று பேச்சோடு பேச்சாக இன்ஸ்பெக்டர் விசாரித்ததன் காரணம் இப்போது புரிந்தது.

இன்ஸ்பெக்டர் காட்டிய பிசினஸ் டுடே பத்திரிக்கையின் தாள்களுக்கிடையில் ஒட்டிக் கிடந்தது சுடாத சப்பாத்தி ஒன்று...!
................................................................................................................................................................................................

முற்றும்

எழுதியவர் : அருணை ஜெயசீலி (4-Jul-15, 3:19 pm)
பார்வை : 1289

மேலே