இதயமும் காகிதமும்
இதயமும் காகிதமும்
இதயத்தைப் போலவே
விழுந்து கிடக்கிறது காகிதம்
நல்லவர்களது மனசு
எழுதப்படாத காகிதம்
இரண்டுமே வெள்ளை
அடிக்கும் சிறு காற்றுக்கெல்லாம்
எங்கெல்லாமோ பறக்கும்
காகிதம் போல்
மனசும் உள்ளே எழும்
எண்ணப் புயல்களுக்கு
ஈடு கொடுக்க முடியாமல் அலைகிறது
காகிதத்தில் குழந்தையின்
கிறுக்கல் போல
மனசிலும் பல புரியாத
உணர்வுக் கிறுக்கல்கள்
மழையின் பின்னர்
நிலத்தோடு ஒட்டிக் கொண்ட
காகிதம் போல்
மனசுள்ளும் விடாப்பிடியாய்
ஒட்டிக் கொண்ட சோகங்கள்
சுக்கு நூறாய்
கிழிக்கப் படுவது
புறக்கணிக்கப் பட்ட
காதல் கடிதம்
மட்டும் தானா ?
மனசும் சிலரின்
குத்துப் பேச்சினால்
தாறு மாறாய்
குத்திக் கிழிக்கப் படுகிறதே ....
காகிதத்தில் ஓட்டை விழுந்த பட்டம்
மேலெழும்ப மறுப்பது போல்
விரக்திகளால் ஓட்டை விழுந்த
இதயத்தை கொண்ட
மனிதனின் வாழ்வும்
எழுச்சியின்றிக் கிடக்கிறது.
நண்பனுக்கு நண்பன்
ஆறுதல் என்பதாலோ என்னவோ
மனசின் ஆறுதலுக்காய்
நான் எழுதும் கவிதைக்கும்
தன்னையே அர்ப்பணித்தது
காகிதம் ....