கைந்நிலைப் பாடல்12 தந்த சிந்தனை

Dr.கன்னியப்பரின்,பதிவாகிய

நாக நறுமலர், நாள்வேங்கைப் பூ,விரவி,
கேசம் அணிந்த கிளர்எழிலோள் ஆக,
முடியும்கொல்?’ என்று முனிவான் ஒருவன்
வடிவேல்கை ஏந்தி, வரும். --------என்ற கைந்நிலை-12ஆம் பாடலைப் படித்தேன்.

புன்னையின் நல்ல மலரையும், அன்றலர்ந்த வேங்கைப் பூவினையும் கலந்து, கூந்தலில் அணிந்து விளங்கிய கிளர்ச்சியூட்டும் வனப்புடையோளாகிய நம் தலைவி என்பதில் ஒரு நல்ல அழகிய ஓவியம் தீட்டப் படுகின்றது;
அதே சமயம் 'தலைவியின் உடலானது அழிந்து விடுமோ என்று ஐயம்' என்ற பொருள் 'ஆகம் முடியுங்கொல்' என்ற பதங்களுக்கான பொருளாகக் கொள்ளப்பட்டதில்தான் என் மனம் மாறுபடுகிறது.
இங்கு தலைவியே தனது துயரை அவ்வாறாக எடுத்துக் கூறி 'தான் அவன் பிரிவினால் இறந்துவிடுவேனோ என எண்ணும்' ஒரு கழிவிரக்கம் போல் எடுத்துக் கூறப்பட்டுள்ளது எனலாம். அது அக்கால வழக்கினை ஒத்ததாக இருந்துவிட்டுப் போகட்டும்;
இக்காலச சிந்தனையில் அதனை என் மாற்றி யோசிக்கக் கூடாது? அதாவது:
கொடிய விலங்கினங்களும், அரவும், பேயும் வழங்கும் ஆற்றிடையும் கான் யாற்றினிடையும் ஏற்று, இழிவுடை நெறியினும் இரவில் வருவது தன்னுயிரை வெறுத்தவர்க்கே தகுதியாம் என்பது தோன்றக் கூறியது இது என்பது, ‘முனிவான் ஒருவன்’ என்பதற்கு வருத்தமுற்றவனாகிய ஒருவன் என்ற பொருள் கொண்டதால் நிகழ்வதாகும்;

முனிவான் என்பதற்கு இத்தகைய கடும் வழியிலும் (தலைவியைக் காண வரும்) தலைவன் எடுத்துக் கொண்ட கடிய முயற்சிகளை குறிப்பதாக ஏன் கொள்ளக் கூடாது?. அவ்வாறு கடிய முயற்சிகளை மேற்கொண்டு வரும் தலைவனானவன் ' கிளர்ச்சியூட்டும் வனப்புடையோளாகிய 'தலைவிக்குரியவனாகத் தான் ஆக முடியுமா? தான் இச் சுரங்களைக் கடந்து அவளை அடைய மாட்டோமா என்ற ஆர்வமும், விரைவும் கொண்டவனாக வருகிறான் என்று ஏன் கொள்ளக் கூடாது? என்பதே எனது கருத்து. அவ்வாறாயின்,
'புன்னையின் நல்ல மலரையும், அன்றலர்ந்த வேங்கைப் பூவினையும் கலந்து, கூந்தலில் அணிந்து விளங்கிய கிளர்ச்சியூட்டும் வனப்புடையோளாகிய நம் தலைவி தனதுடைமை ஆவாளோ மாட்டாளோ என்று ஐயம் கொண்டு நம் தலைவனாகிய ஒப்பற்றவன் தன் உயிர் வாழ்க்கையையும் பொருட்படுத்தாமல், கூர்மையான வேலைக் கையில் தாங்கி இரவில் வருவான். ஆதலால் இப்படியொரு கடின வழியின் இரவில் நிகழும் அவனது இவ்வரவை நான் அஞ்சுகின்றேன், என் அச்சத்தை விலக்கு என்றாள் என்பதாகவும் பொருள் கொள்ளலாமல்லவா? இங்கு இனி இரவுக் குறியை விலக்கக் கோரு என்று தோழியிடம் குறிப்பால் உணர்த்துவதாக எடுத்துக்கொள்ளலாமே!.

நிற்க

கைந்நிலை என்பதற்கு ஒழுகலாறு என்று பொருள்கொள்ளலாம் என்பது அறிஞர்களது எண்ணம். அவ்வாறிருக்க இப்பழம் பாடல்கள் என் மனதில் அடிக்கடி குடியுடன் சேர்ந்த ஒழுக்கக் கேட்டினையே (வருந்தும் வகையில்) நினைப்பூட்டுவதும் தவறென்று கொள்ளப்படமாட்டாது தானே!

'வருவான்' என்ற நினைப்பிலுள்ள ஒரு குடும்பத்தலைவியின் வருத்தமும், அவன் வராது நீடிக்கும் பொழுதிற்குக் காரணமான குடிப் பழக்கத்தை நினைத்த வருத்தமும் இங்கு சொல்லப்படுகின்றது.

நாளும் நினைந்தழியும் நங்கை நினைப்பழியத்
தாளின் பணம்,நெஞ்சில் தானழுத்த-நாளும்
முடியுங்கொல் லென்ற முனிவுடனே நாளும்
குடியின்மேல் வீழ்த்தல் கொலை!

பதவுரை:
நாளும் நினைந்தழியும்= பகற்பொழுதெல்லாம் வருவான் என்ற நினைப்பினில் தன்னை அழித்தவளாக வாழும்,
நங்கை நினப்பழிய=பெண்ணிற் சிறந்தவளாகிய தன் மனைவியின் எண்ணம் மறைந்தழிந்து போகும்படிக்கு
தாளின் பணம்= முயற்சியால் கூடிய தனது வருமானமானது
நெஞ்சில் தானழுத்த= நெஞ்சிலுள்ள பையில் கிடந்து அழுத்திக்கிடக்க
நாளும்= அன்றைய (சாராய விற்பனைக்கான) பொழுது
முடியுங்கொல்= முடிந்து போய்விடுமோ(கடை மூடப்படுவிடுமோ?)
என்ற முனிவுடனே= என்கின்ற வருத்தத்துடனே
நாளும்=தினம்தினம்
குடியின்மேல் வீழ்த்தல்= குடிப்பதற்கான பழக்கத்தின்மேல் ஈடுபடுத்துதல்
கொலை= அவரைக் கொன்று போடுவதற்குச் சமமாகும்!
பொருள்:
பகற்பொழுதெல்லாம் வருவான் என்ற நினைப்பினில் தன்னை அழித்தவளாக வாழும், பெண்ணிற் சிறந்தவளாகிய தன் மனைவியின் எண்ணம் மறைந்தழிந்து போகும்படிக்கு,முயற்சியால் கூடிய தனது வருமானமானது நெஞ்சிலுள்ள பையில் கிடந்து அழுத்திக்கிடக்க
அன்றைய (சாராய விற்பனைக்கான) பொழுது முடிந்துபோய் விடுமோ (கடை மூடப்பட்டு விடுமோ?) என்கின்ற வருத்தத்துடனே,தினம்தினம்
குடிப்பதற்கான பழக்கத்தின்மேல் ஈடுபடுத்துதல்,அவரை (அவ்விருவர்
அடங்கிய குடும்பத்தையே) கொன்று போடுவதற்குச் சமமாகும்!
இப்படிச் சிந்தித்து இப்பாடலை எழுத வழிவகுத்துத் தந்த மருத்துவர்
அய்யா அவர்களுக்கு எனது நன்றிகளைச் சொல்லிக்கொள்கிறேன்.
====== ====

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (6-Jul-15, 7:23 pm)
பார்வை : 41

மேலே