அம்புலி நட்பாட்டம்

பரண் மீது கிடக்கும்
சிறுவயது எண்ணச் சித்திரத்தை
தூசு தட்டுகிறேன் -அது
பாட்டி வீட்டில் ஒரு
கோடை விடுமுறை

'ஊரின்' கடைசி தெருவும்
'சேரியின்' முதல் தெருவும்
சந்திக்கும் அந்த இடத்தில்
என் பாட்டியின் வீடு

இன்று வளர்ந்திருக்கும்
மாடி வீடுகள் அன்று
கூரைகளாகவும், ஓடுகளாகவும்
குழந்தை பருவத்தில் இருந்தது

இன்றுபோல் வீடுதோறும்
தொலைகாட்சி தரிசனம்
கொடுக்க முடியா அந்நாளில்
பஞ்சாயத்து பொது டிவி
அனைவரையும் ஓர்
குடையின்கீழ் சேர்த்திருந்தது

திரையில் வந்த முத்தக்காட்சிக்கு
என் முகத்தை அவள் மடிமீதும்
அவள் முகத்தை என் புறம் மீதும்
புதைத்துக்கொண்டாள் ராசாத்தி
காரணம் என்னவாயிருக்கும்?...

காட்சி முடிந்தும்
இருட்டாகவே இருந்தது
திடீரென போன மின்வெட்டில்
கண்ணாமூச்சு ஆடுவதென
தீர்மானம் எடுக்கப் பட்டது

துள்ளுக்குட்டி வீட்டின்
ஆட்டுப் பட்டியில் நானும்...

வேப்பமரத்தடி சூலத்திற்கு
பின்னால் ராசாத்தியும் ....

அந்தோனி வீட்டு தட்டிக்குப்
பின்னால் பாவாடைராயனும் ...

மேகத்திற்க்குப் பின்னால்
அம்புலியும் மறைந்திருக்க....

முதல் தெருவும் கடைசி தெருவும்
ஒன்றானது தெரியாமல்
எங்கோ தேடிக்கொண்டிருந்தான்
எங்கள் கூட்டாளி

மின்சாரமற்ற ஓர் இரவின்
சிறப்புச் சலுகையில்
எமது சிரிப்புச் சலவையில்
பௌர்ணமி ஆகியிருந்தது
ஒரு பிறை மதி ......

எழுதியவர் : மேரி டயானா (7-Jul-15, 3:35 pm)
பார்வை : 91

மேலே