பதினாறாம் நாள் -Mano Red

அந்த ஊர்க் காக்காய்கள்
எல்லாத்துக்கும்
கிடா மீசைக்காரர்
இவரை நல்லாவே
அடையாளம் தெரியும்...!!

அனுபவித்த சோதனைக்கெல்லாம்
சனிபகவான் காரணமென
யாரோ சொல்ல ,
அன்று முதல்
காக்காய்களை வெறுத்து
விரட்ட ஆரம்பித்தவர்
இன்னும் நிறுத்தவில்லை..!!

காக்காய்களின் அறிவுக்கும்
மீசை முகம் எட்டியிருந்தது,
அவர் எட்டிப் பார்த்தால் போதும்
எட்டி ஓடுமளவு
பழகி பிழைத்திருந்தது..!!

மீசைக்காரருடைய
அம்மா செத்து
பதினாறாம் நாள் விசேசம்.
காக்காய்க்குச் சோறு வைக்க
நடந்து வரும் போதே
நிலைமை புரிந்தது ஊருக்கு..!!

கா காவென காக்காய் போல
கத்தினார்கள் பயனில்லை,
சனியன் என்று திட்டிக் கொண்டே
திரும்பிவிட்டார்,
காக்காய்களுக்கும் பசிதான்
என்றாலும்
சோத்துப் பக்கம் முகம் திருப்பவில்லை..!!

மனிதனுக்கு என்ன புரியும்..?
காக்காய்கள்
சோறு எடுத்தால் தானே
பந்தி நடக்கும்
வயிறும் நிறையும்.
நேரமாக நேரமாக
அன்னாந்தே பார்த்திருந்தனர்..!!

யோசனையுடன்
வேறு இடத்தில் சோறு வைக்க
வேறு ஆள் வந்தது,
தெறிந்து வந்து
சோறு உண்டது காக்காய்கள்,
அப்பாடா என்று பெருமூச்சு விட்ட
உறவினர்களின் நடுவே
பேச்சு மூச்சின்றி அமர்ந்திருந்தார்
அந்த மீசைக்காரர்..!

எழுதியவர் : மனோ ரெட் (8-Jul-15, 8:23 am)
பார்வை : 163

மேலே