வகுப்புகள் துவங்கப்படுவதே இல்லை
பள்ளிக் கரும்பலகையில்
சுண்ணாம்புத் துண்டுகள்
கரைந்து கொண்டிருக்கின்றன
வகுப்புகளின் சன்னல் வழியே...
பட்டாம் பூச்சிகள் விரட்டுவதும்
அனில்களோடு கிளைகளெங்கும் ஓடி
வானம் தொடுவதுமாக சில கண்கள்,
குறிப்பேடுகளில் ஒழுங்கற்ற கோடுகளில்
ஓவியமாகவும், வரைபடமாகவும்,
சித்திரம் செய்வதுமாக சில கைகள்,
விளையாட்டுகளற்ற மைதானங்களில்
உதைப்பதும், அடிப்பதும், தட்டுவதுமாக,
கற்பனையில் ஆடுவதுமாக சில மனங்கள்
ஆண்டு இறுதிகளில்,
படிப்பதற்கென்றே பள்ளி வந்த சிலரோடே
இவர்களும் மேல் வகுப்புக்குக் கடத்தப்படலாம்...
சட்டமிட்ட பாடத் திட்டங்களிலும்,
வாழ்க்கைத் திட்டங்களிலும்
நுழைத்துக் கொள்ள முடியாதவர்களின்
சிறு கனவுகளுக்கான வகுப்புகள்
துவங்கப்படுவதே இல்லை...!