நூலறுந்த பொம்மை, காணும் கடைவழியை

நாடகத் திரையின் நடுநிற்கு மப்பொம்மை!

நூலொன்று நெற்றியை நெஞ்சத்தைத் தழுவ,
பின்னொன்று கைகால்கள் கவ்வித் தனித்திருக்கும்!
பேயொன்றும், சேயொன்றும் நூற்கண்டைத் தான்கொள்ள
நீயென்றும் நானென்றும் நித்தமும் ஆர்ப்பரிக்கும்!

பேயந்த நூற்கண்டைத் தான்கொண்டால்,
சேயெண்ணும் ஆட்டத்தைக் கைக்கொள்ளா தப்பொம்மை!
சேய்கையில் நூற்கண்டு சிக்கினும் அவ்விதமே,
பேய்சொல்லுமாட்டத்தைப் பின்தள்ளி வேறாடும்!

பேய்செய்யு மாட்டத்தில் பேயாட்டம் தான்கொள்ள,
கைகாலின் நூல்நுனி நுதல்நூலில் சிக்கினால்,
சேய்செய்யு மாட்டத்தால் நூற்கண்டு நெஞ்சினில்,
சிக்குண்டு கட்டுண்ட பூனையாய் வாடிடும்!

தப்பும் நல்லாட்டம்!
சட்டென் றொருநாள் சுழலென்றாடுகையில்,
பட்டென அறுந்த பட்டமாய்த் தலைசாய்க்கும்!
பின் மண்ணில் மக்கும், அப்பாவிப் பொம்மை!

பேயும் சேயும் பெய்விக்கும் கூத்தாட்டம்,
நோயில்லா பொம்மைக்கோர் தொய்வில்லை - வல்பொம்மை
தொங்கும் நூலை பங்கம் செய்யும் - பின்னதால்,
மக்கும் வினையில் தப்பும்! - தப்பிப்பின்,
மங்கலத் தாண்டவம் மகிழ்வுடன் ஆடுமே....!!!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்

எழுதியவர் : சுந்தரேசன் புருஷோத்தமன் (8-Jul-15, 12:38 pm)
பார்வை : 682

மேலே