உயிரின் எழுத்து

குழந்தை "அ" எழுதப் பழகுகிறாள்.
அவளது குட்டிக் கரும்பலகையில்....
ஒரு மழையின் சாரலென விழுகிறது கோடுகள்.
திருத்த முயல்கிறேன்.
என்னைத் தவிர்த்து...
எனக்கு முதுகைக் காட்டியபடி
இரகசியமாகத் தான் எழுதிய "அ"-வை
புன்சிரிப்போடு என்னிடம் நீட்டுகிறாள்.
இப்போது "அ" எனக்கு உயிர் எழுத்தல்ல.
உயிரின் எழுத்து.
*************************************************************************************
குழந்தைக்கு "வாழைப் பழம்" சொல்ல வரவில்லை.
"வாலை பலம்" என்கிறாள்.
நான் திருத்தியும் ...
அவளுக்குத் தான் சொன்னதுதான் "சரி" என்கிறாள்.
இன்று கடைக்காரனிடம் "வாலை பலம்" கேட்டேன்.
ஒரு மாதிரியாகப் பார்க்கிறான்.
அது சரி!....
எனக்கு எது இனிக்கிறதோ
அதைத்தானே நான் கேட்க முடியும்?.
*************************************************************************************************
குழந்தை நோட்டுப் புத்தகத்தை தொலைத்து விட்டாள்.
"ஏண்டி தொலைத்தாய்?"....என்றதற்கு...
"ஒத்தைக் கண்ணன்" திருடி விட்டான் என்றாள்.
ஸ்கூலுக்கு எங்கேடி "ஒத்தைக் கண்ணன்" வந்தான்...என்றதற்கு...
இங்கே நீ தூங்கும் போது அவன் வந்து
திருடிக் கொண்டு போய் விட்டான் என்கிறாள்.
இனிமேல் இவளுக்காக நான்தான் மதியமும்
தூங்காமல் இருக்க வேண்டும் போல.
******************************************************************************************************************

எழுதியவர் : rameshalam (8-Jul-15, 9:05 pm)
Tanglish : uyeerin eluthu
பார்வை : 76

மேலே