இன்றைக்கு வேண்டும் இது

விலைவாசி குறைய வேண்டும்
***விலையில்லாக் கல்வி வேண்டும்
நிலையான கொள்கை வேண்டும்
***நெஞ்சத்தில் உறுதி வேண்டும்
குலைநடுங்க குண்டு வைக்கும்
***கொடுமைகளும் மாள வேண்டும்
கலைமகளின் அருளால் இங்கு
***கவிபாடும் ஆற்றல் வேண்டும் ...!!!

மடலெழுதி அஞ்சல் செய்யும்
***மனமகிழ்ச்சி மீண்டும் வேண்டும்
வடகங்கை தெற்கில் பாய்ந்து
***வளமைதனைக் கூட்ட வேண்டும்
தடங்கலின்றி வேளை மூன்றும்
***தண்ணீர்,மின் சாரம் வேண்டும்
உடலுறுப்பு தானம் செய்யும்
***உறுதிமொழி எடுக்க வேண்டும் ...!!!

பெற்றெடுத்த தந்தைத் தாயை
***பேணிடும்,நல் லிதயம் வேண்டும்
கற்றறிந்தோர் அவையில் நானும்
***கற்றவற்றை உரைக்க வேண்டும்
நற்றமிழில் கதைக்க வேண்டும்
***நயமுடனே சொல்ல வேண்டும்
வெற்றிடமாய் இருக்கும் நெஞ்சை
***மெய்யன்பால் நிரப்ப வேண்டும் ...!!!

மும்மாரி பொழிய வேண்டும்
***முப்போகம் விளைய வேண்டும்
எம்மதமும் போற்ற வேண்டும்
***எழுத்தினிலே ஏற்றம் வேண்டும்
செம்மொழியாம் தமிழைப் பாரில்
***செழுமைபெறச் செய்ய வேண்டும்
தெம்மாங்குப் பாட்டில் நெஞ்சம்
***தெளிவடைந்து மகிழ வேண்டும் ...!!!

பிணியில்லா உடலும் வேண்டும்
***பிணக்கில்லா வாழ்க்கை வேண்டும்
கணிணியிலே புலமை வேண்டும்
***கற்றதினால் உயர வேண்டும்
பணியிடத்தில் நேர்மை வேண்டும்
***பகுத்தறியும் தன்மை வேண்டும்
துணிச்சலுடன் பெண்கள் நாட்டில்
***தொல்லைகளைத் துரத்த வேண்டும் ...!!!

நிலமகளை மலடாக் காமல்
***நெகிழிதனை ஒழிக்க வேண்டும்
விலங்குகளை வேட்டை யாடும்
***மிருகத்தனம் மடிய வேண்டும்
நலத்திட்டம் அரசு தீட்டி
***நலிவுற்றோர் பேண வேண்டும்
புலம்பெயர்ந்த தமிழர் உள்ளம்
***பூரிப்பில் விரிய வேண்டும் ...!!!

வனங்களையும் காத்து மண்ணில்
***மழைவளத்தைப் பெருக்க வேண்டும்
இனக்கொலைக்கு முற்றுப் புள்ளி
***இட்டிடவே வேண்டும் வேண்டும்
மனவுளைச்சல் போக்க நாட்டில்
***மதுவிலக்கு என்றும் வேண்டும்
கனவினிலேக் கண்ட காட்சி
***கண்முன்னே நடக்க வேண்டும் ...!!!

கறையில்லாக் கரமும் வேண்டும்
***கையூட்டு ஒழிய வேண்டும்
குறைவற்ற செல்வம் வேண்டும்
***கொடுத்துதவும் குணமும் வேண்டும்
மறையெங்கும் ஒலிக்க வேண்டும்
***மனிதமிங்கேப் பூக்க வேண்டும்
இறையெண்ணம் நாளும் வேண்டும்
***இறையருளால் சிறக்க வேண்டும் ...!!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (9-Jul-15, 8:33 am)
பார்வை : 101

மேலே