வேலையில்லாப் பட்டதாரி
அதிகாலை பத்து மணிக்கு
துயிலெழுந்து சோம்பல் முறித்து
மெதுவாய்ப் பல் துலக்கி
வேகமாய் வண்டியெடுத்து
வெளியில் கிளம்பினான் அவன்...!
அழகுக் கலை பயின்று
அழகு நிலையம் நடத்தும் நண்பனிடம்
தன் முடியையும் முகத்தையும்
கொடுத்துவிட்டு புலம்பினான்
"நண்பா உன் நெலமைய நெனச்சா
பாவமா இருக்கு" என்று...!
காலைப் பசி குடலைக் கிள்ள
வயிற்றை நிரப்ப வேண்டி
வண்டியை ஒரங்கட்டினான்
வழியோர துரித உணவகத்தில்...!
சமயற்கலை பயின்ற நண்பனிடம்
அது இது என்று கேட்டு வாங்கி
ருசித்துப் புசித்த பின் புலம்பினான்
"உங்க அப்பாட்ட சொல்லி பெரிய
உணவக உரிமையாளர் ஆகிவிடேன்டா" என்று...!
காற்றிலே பறந்த வண்டி
கட கடவென மக்கர் பண்ண
உருட்டிக்கொண்டே வந்து சேர்ந்தான்
தெருமுக்கு இயந்திரப் பழுதுபார்க்கும் கடைக்கு...!
இயந்திரப் பொறியியல் படித்துவிட்டு
இயந்திராமாய் உழைத்துக் கொண்டிருந்தவன்
இருபதே நிமிடங்களில் வண்டியைச்
சரி செய்ததைக் கண்டு புலம்பினான்
"நீயெல்லாம் இங்க இருக்க வேண்டிய
ஆளே கிடையாதுடா" என்று...!
காலை முதல் இரவு வரை
கிடைக்கும் வேலையெல்லாம் செய்து
குடும்பக் கடன் தீர்க்கும் ஒருத்தனை
வலியக் கூப்பிட்டுப் புலம்பினான்
"கெளரவமான அரசுப் பணி கிடைக்கும்வரை
பொறுத்து இருக்கலாமேடா" என்று...!
ஊரெல்லாம் சுற்றிவிட்டு ஒருவழியாய்
வீடு வந்து சேர்ந்த அவன் நேராய்ப் போய்
உட்கார்ந்தான் - பெரிய திரை
தொலைகாட்சிப் பெட்டியின் முன்...!
24*7 செய்திச் சேனல் ஒன்றில்
'விவசாயி தற்கொலை' என்ற செய்தியை
உணர்ச்சியேதுமின்றி பார்த்துப் புலம்பினான்
"லாபமின்றி வேர்வை சிந்தி உழைப்பதற்குப் பதில்
நிலத்தைக் கையகப் படுத்திவிடலாமே" என்று....!
இப்படியே புலம்பிப் புலம்பி ஓர் நாளில் தான்
அம்பானியை விட ஒரு ரூபாய் அதிகம்
சம்பாதித்து சாதித்துவிடுவேன் என்ற
நம்பிக்கையில்...கனவில்...மெல்ல...
லயித்தான் முகநூல் அரட்டையில்
ஓர் வேலையில்லாப் பட்டதாரி....!!!
~ தப்தி செல்வராஜ், சாத்தூர்