விவசாயி - கற்குவேல் பா
விவசாயி
```````````
நீங்கள்
ஒவ்வொருமுறை
தனியார் நிறுவன
முதலாளிகளுடன்
கைக்குலுக்கும் போதும் ..
நூறு ஜோடி
விவசாயி
நிலத்தை
இழக்கிறான் ..!!
* * *
பருத்தி
உற்பத்தி செலவு
முப்பது ரூபாய் ;
கொள்முதல்
விலையோ ,
இருபத்தி எட்டு ..
நட்டம் மட்டுமே
அவன் - அனுதினம்
சந்திக்கும் நண்பன் ..!!
* * *
சமுத்திரம்
கதை சொல்லி
ஒருவன் ஆட்சியில்
அன்று ;
நதி நீரிணைப்பு
கதை சொல்லி
மற்றொருவன்
இன்று ..
இரண்டுமே
கதை என்பதே
இங்கு ஒற்றுமை ..!!
* * *
கங்கையை
சுத்தம் செய்வதில்
காட்டும்
முனைப்பையும்
அக்கறையையும் ..
கொஞ்சம்
எங்கள் ஊர்
காவிரிப் பங்கீட்டிலும்
காட்டலாமே ..!!
* * *
முப்போகம்
இரண்டு போகம்
நிலைமாறி ;
ஒன்றிற்கே
திண்டாட்டம்
என்ற நிலை ..
காரணம்
இயற்கையும் ,
தூய அரசியலும் ..!!
* * *
நியூட்ரினோ
ஆராய்ச்சியில்
முக்கியத்துவம்
செலுத்தும்
நம்மவர்களே ..
சாகும் வரை
உணவும் ;
அதைத்தர
விவசாயமும்
அவசியமென
மறந்துவிடாதீர் ..!!
* * *
இயற்கைத்தாய்
பயிர்களைப்
பெற்றெடுக்க
கர்பப்பை திறந்து
காத்திருக்க ..
தத்துக்
குழந்தைகளாம் ,
இறக்குமதி
தானியங்களின்
அவசியம் என்ன .. !!
* * *
ரேசன்
பொருட்களை
வங்கிக்கணக்கில்
பணமாக அளிக்கும்
உயரியத் திட்டம் ..
கொள்முதல்
சுருக்கி ;
விவசாயத்தை
அடியோடு
வேரறுக்கும் திட்டம் ..!!
* * *
ஒவ்வொருமுறை
விவசாயி
தற்கொலை
செய்யும்போதும் ..
எங்கோ
ஒரு முதலாளி
சிரித்துக்
கொண்டிருக்கிறான் ..!!
- கற்குவேல் . பா