ஆதலால் காதல் செய்வீர்
கோடிப் பெண்களில் உன்னைத்
தேடிப் பிடித்து வந்தேன்
கோமகளைப் போற்றிப் பாடி
கடிதம் ஒன்றைத் தந்தேன் !
கடிதம் வாங்கிக் கொண்டு - ஏன்
கடுகுப் பார்வை பார்த்தாய் ?
உன் அழகால் மிரட்டித் தானே
எனை இங்கு வந்து சேர்த்தாய் !
பிரித்துப் பார்த்தாய் கடிதத்தை
எழுதி வைத்தேன் இதயத்தை !
முழுதாய்ப் படித்து முடிக்கும்போது -உன்
முகத்தில் கண்டேன் உதயத்தை!
விழிகள் திறந்து நோக்கினாய் !
வில்லம்பால் என்னைத் தாக்கினாய் !
விரல்களால் என்னைத் தொட்டு
விரவும் உயிரைப் போக்கினாய் !
என் அழகே ! என் உலகே !
கடிதம் படித்தது போதும் - என்
இதயம் துடிப்பதைக் கேள் !
புல்லைப் போன்ற புருவம் - இது
பிரம்மன் வரைந்த கோடு !
இதன் அழகில் மயங்கித் தானே
பட்டேன் பெரும் பாடு !
குலுங்கி குலுங்கி ஆடுதே
காதில் தொங்கும் தோடு !
குலமகளைத் தொட்டதால்
ஆடுதோ குதூகலத் தோடு !
குயவன் கைகள் பட்டு - இது
குழைத்து வைத்த மூக்கு !
தமிழை நீயும் பேச - செந்
தேனைச் சொட்டும் நாக்கு !
நெற்றியின் மத்தியிலே நீ
குழைத்து வைத்தப் பொட்டு !
சுற்றிப் போடத் தொடங்கினேன்
நோகுதே கண்கள் பட்டு !
புன்னகை நீ செய்யும்போது
எட்டிப் பார்க்கும் பற்கள் !
புகழத்தான் நான் நினைத்தேன்
கிடைக்கவில்லை சொற்கள் !
குரல் எடுத்துப் பேசும் - உன்
குயில் போன்ற கழுத்து !
எழுத நினைத்து என்ன?
அகப்படவில்லை எழுத்து !
காண்போரைக் கவர்ந்திழுக்கும்
காந்தமான கண்கள் !
இத்தனை அழகா உன்னிடத்தில் ?
பாவம் மற்றப் பெண்கள் !
அடுத்த வரி சொல்லும் முன்னே
அரவணைத்து முத்தமிட்டாய் !
காதல் செய்ய வேண்டுமென்று
என்னிடம் நீ யுத்தமிட்டாய் !
- அருண் பாரதி