மழை நிற்குமென நினைத்திருந்தேன்

மழை நிற்குமென நினைத்திருந்தேன்....
இரவில் தூரலாய் ஆரம்பித்த மழை...
பெருமழையாய் உருவெடுத்தது...
முதலில் மின்சாரத்தை
தத்து எடுத்துக்கொண்டது...
சிறிது சிறிதாய் வீட்டிலிருந்த
மெழுகுவர்த்தியையும் கவர்ந்து சென்றது....
வீட்டில் தனியாய் இருந்த நான்
மழை நிற்குமென நினைத்திருந்தேன்....
நேரம் ஆக ஆக..
பசியெடுக்க ஆரம்பித்தது...
வெளியே செல்ல எத்தனித்தால்
மழையின் கூட்டாளி
காற்றின் சத்தம் பயமுறுத்திக் கொண்டிருந்தது...
பசி யானைப்பசியாய் உருவெடுத்துப் பின்
மழையின் வாய்க்குள் அடங்கிப்போனது...
நானோ...
மழை நிற்குமென நினைத்திருந்தேன்....
வெளியே மட்டுமே மழையும் காற்றும்..
இருட்டிலே வீட்டில் தனியாய் இருந்து
பார்த்தால் தான் தெரியும்...
மழையின் கொடையால்
தூக்கம் தொலைந்து போயிருந்தது...
கனவுகளோ கரைந்து போயிருந்தது...
எனக்கே தெரியாமல் எப்போதோ
தூங்கிப்போயிருந்தேன்..
அப்போதும் கூட
மழை நிற்குமென நினைத்திருந்தேன்....
திடுமென விழித்தபோது மணி காலை ஒன்பது...
மழையின் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது...
விழித்ததும் அலைபேசி ஒலிக்க
பேசி முடித்ததும்..
அலைபேசியும் மரித்துப் போனது...
இரவில் மடிந்த பசி உயிர்க்க ஆரம்பித்தது...
வெளியில் சென்று பசியாரலாம் என்ற நம்பிக்கையில்
மழை நிற்குமென நினைத்திருந்தேன்....
பதினோரு மணிக்கு கிளம்பி
வண்டியெடுக்க எத்தனித்தால்
மழையின் பிடியை விட்டு வர மறுத்தது...
பெய்யும் மழையிலே தள்ளிக்கொண்டே உணவகம் அடைய
அங்கேயும் மழை தன் வேலையை காட்டி இருந்தது...
உண்டிட ஒன்றுமேயில்லை...
அப்போதும் கூட நம்பிக்கையாய் நான்
மழை நிற்குமென நினைத்திருந்தேன்...
மழை மட்டும் இன்னும் நிற்கவேயில்லை.....