கணவன் அமைவதெல்லாம்

காலையிலிருந்து பரபரப்பாய் இயங்கி கொண்டிருந்த அலுவலகம் இப்போது கொஞ்சம் அமைதியாகி இருந்தது.அலுவலக ஊழியர்கள் எல்லோரும் வெளியேறி விட்டநிலையில், அலுவலகம் வெறிச்சோடி இருந்தது.

கோபாலன் மட்டும் அங்கும் இங்கும் உலாத்தி கொண்டிருந்தான்.அடிக்கடி பாத்ரும் செல்வதும்,முகம் கழுவுவதும்,கைக்குட்டையை எடுத்து முகம் துடைப்பதுமாக நிரம்பவே பதட்டமாக தெரிந்தான்.அந்த ஏ.சி அறையிலும் சற்றே வியர்த்திருந்தான்.

"என்ன கோபால்....இன்னும் கிளம்பல....?"எதிர்பட்ட நண்பனின் கேள்விக்கு திணறினான்.

"ஒரு சின்ன வேல பாக்கி...அத முடிச்சவுடனே கிளம்பிடுவேன்."சற்றே சமாளித்தபடி....

"சரி...அப்ப நான் கிளம்பறேன்...நீ மெதுவா வா...ஓகே பாய்"என்றபடியே கிளம்பிவிட்டான்.

கோபாலன் அருகிலிருந்த பாத்ரூம் பக்கம் ஒதுங்கினான். அங்கிருந்த வாஷ்பேசினில் முகம் கழுவிவிட்டு நிமிர்ந்தான்.பாக்கெட்டிலிருந்து கைக்குட்டையை எடுத்து முகம் துடைத்தான்.அடிக்கடி முகம் துடைத்ததில் கைக்குட்டை அதிகமாகவே ஈரமாகியிருந்தது.

நிமிர்ந்து கண்ணாடி பார்த்தான்.அதில் தெரிந்த கோபாலன் சிரித்தான்.அதில் நக்கலும்,நையாண்டியும் தூக்கலாகவே தெரிந்தது.

"ஏன் சிரிக்கிறாய்..."இது கோபாலன்.

"பின்னே சிரிக்காமல் என்ன செய்வது....நீயோ கருவக்கட்டை...அவளோ சந்தனக்கட்டை...ஒத்துவருமாடா...?மனசாட்சி கூரீட்டியாய் குத்தியது.

ஒரு வார காலமாகவே இதே மாதிரி போராட்டம்தான் உள்ளுக்குள்...

சமீபத்தில்தான் வேலைக்கு சேர்ந்திருந்தாள் சுமதி.தோராயமாக இரண்டு மாதங்கள் ஆகியிருக்கலாம்.வந்த அன்றைக்கே அலுவலகத்திலிருந்த அனைவரையும் தன் வசீகரச்சிரிப்பால் வசீகரித்திருந்தாள்.கோபாலனை சற்று அதிகமாகவே....

கோபாலனுக்கு தன் அழகு,நிறம் பற்றி கொஞ்சம் தாழ்வுமனப்பான்மை அதிகம்தான்.யாருடனும் அதிகம் நெருங்கி பேசமாட்டான்.தனிமையையே அதிகம் நாடியவன்.திருமணம் பற்றிய நினைவே இல்லாதிருந்தவன்.எப்படியோ சுமதியின் மேல் மட்டும் காதல் அரும்பிவிட்டது.

அவளின் அழகிய நடை, வசீகரமான முகம், சிரிக்கும்போது முத்துக்களாய் தெரியும் பற்கள்,பேன் காற்றுக்கு முகம் தழுவும் முடிகள்,தன் அழகிய நீள விரல்களால் ஒதுக்கும் லாவகம்,நுனி நாக்கில் சரளமாய் புரளும் ஆங்கிலம் எல்லாவற்றையும் ரசித்திருக்கிறான்.தட்டு தடுமாறி எதுகை, மோனையில் கவிதை எழுதும் நிலைக்கும் வந்துவிட்டான்.இருந்தும் காதலை மட்டும் சொல்ல முடியவில்லை.நூறு பேரை ஒத்தையாய் சமாளிக்கும் வீரனும்கூட பெண்ணின் விழிகளை பார்த்து காதலை சொல்ல முடிவதில்லை.

மனதுக்குள் நடக்கும் பட்டிமன்றத்திற்கு இன்று தீர்ப்பு சொல்லியே ஆகவேண்டும்....ஒரு முடிவுடன் வெளிப்பட்டான் கோபாலன்.வெளியே வராண்டாவில் காத்திருக்க ஆரம்பித்தான்.

கண்ணாடி கதவுக்கு அப்பால் சுமதி வருவது தெரிந்தது. கோபாலனுக்கு உள்ளுக்குள் நடுக்கம் பரவியது.இருந்தும் தைரியப்படுத்தி கொண்டான்.சுமதி நெருங்க, நெருங்க கோபாலன் நொறுங்கி கொண்டிருந்தான். உதடுகள் வறண்டு போயிருந்தது.முகத்தில் சற்றே மிரட்சி....நெருங்கி இருந்தாள்...

"என்ன கோபால்...இ்ன்னும் கிளம்பலயா...?"

"இல்...ல...உங்....களுக்காகத்தான் காத்து....கிட்டு இருக்....கேன்...."உதடுகள் மெதுவாய் வார்த்தைகளை துப்பியது.

"எனக்காகவா...!ஏன்...?"ஆச்சர்யப்பட்டாள்.

"நடந்துகிட்டே பேசுவோமே..."

"ம்...சொல்லுங்க...என்ன விஷயம்...?"

"நான்...நான்...உங்கள.... காத... லிக்கிறேன்..."

"என்ன கோபால்... ஜோக்கடிக்கிறீங்களா..?" உஷ்ணமாய் கேட்டாள்.

"இல்ல,சீரியஸாத்தான் சொல்றேன்...நீங்க இல்லேன்னா நான் செத்துடுவேன்."

"உங்கள கட்டிக்கிட்டா நான் செத்துடுவேன்"முதல் ஈட்டி நங்கென்று நடுநெஞ்சில்....

"கொஞ்சமாவது யோசிச்சிங்களா...?என்னோட அழகென்ன...?கலரென்ன...? உங்களுக்கும்...எனக்கும்... எப்படி ஒத்துவரும்....?"

"நல்ல வாழ்க்கைக்கு அழகு, கலராங்க முக்கியம்.என்கிட்ட நல்ல மனசிருக்கு...நல்லா சம்பாதிக்கிறேன்...உங்கள காலம்பூரா கண்கலங்காம வச்சு காப்பாத்துவேன்...."

"அய்யோ...கோபால்...என்னை மறுபடி மறுபடி டென்ஷனாக்காதீங்க.... இன்னைக்கு பிச்சைகாரன் கூடத்தான்,ஒருத்திய வச்சு குடும்பம் நடத்துற அளவுக்கு சம்பாதிக்கிறான்...அதுக்காக பிச்சகாரன கல்யாணம் செஞ்சுக்க முடியுமா...?" இரண்டாவது ஈட்டி.

"கோபால்....எனக்கின்னு சில ஆசைகள்,சில கற்பனைகள் இருக்கு....எனக்கு வரப்போறவர்...சிவப்பா.... அழகா....உயரமா....ட்ரிம்மான உடம்போட இருக்கணும். அப்புறம்....நீங்க,இந்த தொப்பைய கொஞ்சம் குறைக்க பாருங்க....அப்புறம் என்ன காதலிக்கிறத பத்தி யோசிக்கலாம்..."

"ஓகே கோபால்....வேற எண்ணம் ஏதாவது இருந்தா அழிச்சிடுங்க...எனக்கு பஸ் வந்துடுச்சு...நான் கிளம்பறேன்..."

கோபாலனுக்கு பூலோகமே இருண்டுவிட்ட உணர்வு. மயக்கம் வருவது போலிருந்தது. பக்கத்திலிருந்த கம்பியை ஆதரவாய் பற்றி கொண்டான். நெடுநேரம் அப்படியே நின்றான்.

ஒருவாரம் கழித்து... கோபாலன் வீட்டில்...

"டேய் கோபால்...ஏண்டா வேலைக்கு வரதில்ல..."

"பிடிக்கல..."

"தெரியுண்டா....நானும் கேள்விப்பட்டேன்... அதுக்காகவா வரல..."

"ஏண்டா...எனக்கு காதலிக்கிற தகுதி இல்லையா...?"

"யார்றா சொன்னது...உன்ன கட்டிக்க அவளுக்குத்தான் கொடுத்து வைக்கல..."

"சரி...விடுறா...இதுக்குபோய் கலங்கிட்டு...என்னோட ப்ரெண்ட் அடிக்கடி சொல்லுவான்...உனக்கு காதலி கிடைக்கலேன்னு கவலைப்படாதே...அது உனக்கு வரப்போற மனைவியோட வேண்டுதலா கூட இருக்கலாமுன்னு...அது மாதிரி நினைச்சுகிட்டு போய்கிட்டே இருக்கனும்டா..."
♥♥♥♥♥♥♥
அந்த பேருந்து நிலையம் சற்றே பரபரப்பாய் இருந்தது. எங்கும் ஆள் நெருக்கடி... விதவிதமான பேச்சுக்குரல்கள்,கடைக்கார்களின் வியாபார கூவல்கள்...

"ஏய்...சுமதி...எப்படிடீ இருக்கே...?குரல் கேட்டு திரும்பினாள் சுமதி.

"நீ....நளா....நளாயினிதானே...? நீ எப்படிடீ இருக்கே...?

"எனக்கென்ன...நான் ரொம்ப சந்தோஷமாவே இருக்கேன். அன்பான கணவன்,அழகான குழந்தைங்க...ஆமா...நீ ஏண்டீ இப்படி இளச்சி போய்ட்டே...? ஆளே மாறிட்டே...எவ்வளவு அழகா இருந்தே....இப்படி ஆய்ட்டே...?"

"அதப்பத்தி மட்டும் கேக்காத... உடம்பாலயும்....மனசாலையும்...நான் ரொம்பவே நொந்துட்டேன்....ஆமா உன்னோட கணவர் எங்க...? ஆளு எப்படி...?"

ஆளு கொஞ்சம் கருப்புத்தான்
....ஆனா ரொம்ப நல்லவர். எனக்கு ஏதாவது ஒண்ணுனா துடிச்சு போய்டுவார்.இப்பகூட பார்...பஸ்ல இடம் போட போயிருக்கார்.கொஞ்ச தூரந்தானே...வேண்டாங்கண்ணு சொன்னா கேட்க மாட்டார். என்னோட பொண்டாட்டிய தனியா கூட்டிபோக,என்னால கார் வாங்க முடியலேன்னாலும்,சங்கடம் இல்லாம கூட்டி போகணும்ல அதுக்காகத்தான்னு சொல்லுவார்..."

"ஆம்பளங்கற தகுதி வச்சிக்கிற மீசையிலையோ, திடகாத்திரமான உடம்புலயோ வர்றது இல்ல ...தன்னோட மனைவியோட உணர்வுகளுக்கும்,உணர்ச்சிகளுக்கும் மதிப்பு கொடுத்து அவள வச்சிக்கிற விதத்துலதான் இருக்கு...அந்த வகையில நான் ரொம்ப கொடுத்து வச்சவ...."

கோபாலன் தூரத்தில் வந்து கொண்டிருந்தான்.அருகே வர வர அதிர்ச்சியானான்.

"அது யார் சுமதியா...?நம் மனைவிக்கு பக்கத்தில் நிற்பது..."ஆச்சர்யமானான். யார் முகத்தில் கடைசிவரை முழிக்க கூடாதென்று நினைத்திருந்தானோ அவள் முன்னே நிற்க வேண்டிய கட்டாயம்.அப்படியே சுற்றி வந்து சுவரோரமாய் நின்று கொண்டான்.

"ஏய்...என்னடி ஆச்சு... சொல்லுடி...?"

"என்னத்த சொல்லுறது...நான் நெனச்சமாதிரியே எனக்கு அழகான கணவர் கிடைச்சார்...ஆனா கொஞ்ச நாளைக்குள்ள என்னோட சந்தோஷமெல்லாம் அழிஞ்சி போச்சி.அந்தாளுக்கு நிறைய கேர்ள் ப்ரெண்ட்ஸ்...தினம் தினம் யாரோடவாவது வருவார்....கேட்டா...அடி,உதை...ஆனா நான் மட்டும் யார் கூடவும் பேசிடக்கூடாது... வெக்கத்தவிட்டு சொல்றேன்டி ...உடம்பும்,மனசும் ஒத்துக்குதோ,இல்லையோ... படுண்ணா...படுக்கணும். சரியான நரக வாழ்க்கை... வெறுத்து போய்த்தான்... போடா...உன்னோட வாழுறதும் ஒண்ணுதான்... சாகுறதும் ஒண்ணுதான்னு சொல்லிட்டு டைவர்ஸ் வாங்கிட்டு வந்துட்டேன்.இப்ப தனியாத்தான் இருக்கேன்..." என்றவள் கண்களில் நீர் தழும்பியது.

"கொஞ்சம் இங்கே வெய்ட் பண்ணு...என்னோட கணவர கூட்டி வந்துடறேன்..."

சொன்ன கொஞ்ச நேரத்தில் கோபாலனை கூட்டி வந்தாள். கோபாலன் சங்கடமாய் நெளிந்தான்.

"இவர்தாண்டி என்னோட கணவர் "குரல் கேட்டு நிமிர்ந்தவள் அதிர்ச்சியானாள்.பேச்சு வரவில்லை.

கோபாலன் சற்றே முறுவலித்தான்.வார்த்தை சவுக்கெடுத்து விளாச ஆசைதான்...ஆனாலும் வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சுவது நியாயமில்லையே...அப்படியே நின்றான்.

"சரிடி...நாங்க கிளம்பறோம்..." இறுக்கத்துடனே கிளம்பினர்.

கொஞ்சதூரம் போனபின் கோபாலன் மட்டும் திரும்பி பார்த்தான்.சுமதி பார்த்து கொண்டேயிருந்தாள்.அந்த பார்வையில் எதையோ தவறவிட்ட ஏக்கம் தெரிந்தது. மறையும்வரை பார்த்து கொண்டேயிருந்தாள்....
பனவை பாலா.....

எழுதியவர் : பனவை பாலா (12-Jul-15, 5:18 pm)
பார்வை : 583

மேலே