கொலையாளி 3 கிரைம் சிறுகதை
..................................................................................................................................................................................................
முதல்நாள் இரவு பிடித்த மழை அதிகாலையில்தான் ஓய்ந்தது. வசந்த குமார் –வசந்த் என்றே அழைப்போமே - உடற்பயிற்சி செய்து விட்டு வந்தபோது அவன் வீட்டுப் பூனைக்குட்டி நனைந்த தலையணை போன்று ஓடி வந்தது. அதை ஒரு டவலில் சுற்றி டிரையர் போட்டு உலர்த்திக் கொண்டிருந்த வேளை இன்ஸ்பெக்டர் பூவராகன் ஃபோன் செய்தார்.
“ வசந்த் , என்ன பண்ணிட்டிருக்கீங்க? ”
வசந்த் இம்மாதிரி கேள்விகளுக்குப் பிடி கொடுக்க மாட்டான்.
“ என்ன விஷயம் சார்? ” – என்று கேட்டான்; இதன் அர்த்தம் நான் என்னத்தையோ பண்ணிட்டு போறேன், உங்களுக்கென்ன வேணும், அதைச் சொல்லுங்க- என்பது..
ஒரு கேஸில் உதவ வேண்டுமாம்.
இங்கிருந்து திருவான்மியூர் போகிற ரூட்டில் இடது பக்க இரண்டாவது பாதையில் எரிந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அது நாராயணன் என்பவருடையது. நாராயணன் சினிமா எடிட்டர். சொந்தமாக ஸ்டுடியோ வைத்திருப்பவர். பணக்காரரான ஒருவர் நாதியற்றவராக அந்த ரூட்டில் விழுந்து கிடக்கும் மர்மத்தை வசந்த் ஆராய வேண்டுமாம்.
“ முதல்ல இது கொலையா தற்கொலையான்னு பாருங்க..! சடலத்துக்குப் பக்கத்துல எரிஞ்ச நிலையில அவரோட மொபைல் ஃபோன் கிடந்தது. சடலம் கிடந்த இடமும் நேரமும் கொலையாகி இருக்கலாம்னுதான் காட்டுது. நாராயணனோட டிரைவர் இப்ப வேலையை விட்டுப் போயிட்டான். அந்தப் பயலுக்கு ஏதோ தெரிஞ்சிருக்கு.. தூக்கிட்டு வந்து ரெண்டு தட்டு தட்டுனா உயிரை விட்டுடுவான் போலத் தெரியறான்..! அவனை ஃபிரண்டு பிடிச்சி நைச்சியமாப் பேசி விஷயத்தை தெரிஞ்சிக்கணும்.. இந்த மாதிரி வேலையெல்லாம் உங்களுக்கு அல்வா சாப்பிடற மாதிரின்னு எனக்குத் தெரியும்..! கொஞ்சம் கவனிங்களேன்....” என்ற பூவராகன் அடுத்துக் கேட்டார். “ என்ன மியாவ்னு சத்தம் கேக்குது ? ”
வசந்த் சிரித்தான். “ மடியில பூனை இருக்கு சார் ”
அடுத்து அவர் என்ன கேட்பாரென்று அவன் அறிவான். விடுகிற மனுசனா இவர்?
“ பூனைக்குட்டி இருக்கட்டும், பெண்டாட்டியை கொஞ்சுறது எப்போ? ”
“ காலங்கார்த்தால பயமுறுத்தாதீங்க சார்..! ” என்று சொல்லி ஃபோனை வைத்தான்.
முள்ளுத்தாடி, முறுக்கு மீசை, பரட்டைத் தலையோடு குப்பத்து சாராயக் கடையில் நாராயணனின் டிரைவர் சுப்ரமணியின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தான் வசந்த்.
வந்து விட்டான்..
“ ஒழு கட்டிங்.. ப்ளீஸ்.. ” சுப்ரமணியிடம் கை நீட்டினான். “ மன்சே சரியில்ல ப்ரோ..! பெரிய மன்சங்க கிட்ட டிரைவர் வேல பாக்கவே கூடாது..! ”
முதல் தூண்டில்...
“ காசு நான் தர்றேன்.. ஹேய், உன்னப் பார்த்தாலே என்னென்னவோ சொல்லத் தோணுதே... என்னை மாட்டி விட்டுட்டு அவன் போய்ட்டான் ப்ரோ..! ”
முக்கால் மணி நேரத்திற்குள் வசந்த்தின் தலை சுப்ரமணியின் மார்பில் சாய்ந்திருந்தது.
“ அப்படி என்னதான் உன் பிரசினை? ” என்றான் சுப்ரமணி.
வசந்த் “ பிரசினையை ” சொல்வது போல வந்து சொல்லாமல் மறைத்தான்.
அடுத்த நாள்...
“ டேய்.. ஒன்ன மாதிரி தாண்டா எனக்கும் பிரசினை..! என்றான் சுப்ரமணி. “ இங்க வேண்டாம்... வீட்டுக்கு வா.. பேசலாம்..! ”
மீன் மாட்டிக் கொண்டது.
அந்த உளறல், வாந்தி எல்லாவற்றையும் எடிட் செய்து விட்டால்..
நாராயணனுக்கு, ஊருக்குத் தெரியாத ஒரு சின்ன வீடு..! ரத்னா..! நீலாங்கரையில் பங்களா.. ரத்னா வரைவின் மகள் என்பதை நாராயணன் ஏற்கவும் இல்லை; நம்பவும் இல்லை. அவளை மனைவியாகவே பாவித்தார். மனைவியிடம் விசுவாசத்தை எதிர்பார்க்கலாம்.. ரத்னாவை கட்டம் கட்டி நிற்கச் சொன்னால் அவள் நிற்பாளோ? அவள் கல்வித் துறை மந்திரி அண்ணாமலைக்கும் சின்ன வீடானாள். இது நாராயணனுக்குப் பிடிக்கவில்லை. அவளை ஏடாகூடமாகப் படம் பிடித்து, நெட்டில் போட்டு விடுவேன் என்று பிளாக்மெயில் செய்தாராம். அந்தப் புகைப்படங்களின் சிடியை தன்னிடம் கொடுத்திருப்பதாக டிரைவர் கூறினான். கடைசியில் அந்த ரத்னாவே நாராயணனை கொலை செய்திருக்கலாம் என்றான் டிரைவர்.
வசந்த்தும் இதே போல் ஒரு கதையைப் புனைந்து அவனிடம் கூறி தன்னிடமிருந்த வெற்று சிடியை கொடுத்து அந்த சிடி அடங்கிய கவரை லாவகமாக மாற்றினான். சீலிட்ட கவர்..!
“ ரத்னா மோசமான பொம்பளைதான்.. ஆனா மோசமான பொம்பளையே இல்ல ! ” வசந்த்திடம் விவரம் கேட்ட பூவராகன் உதிர்த்த கருத்துதான் இது.
ஒரு விஷயம்..! வசந்தகுமாரும் பூவராகனும் பேசுவதை வேறொருவர் கேட்டால் தலையை பிய்த்துக் கொள்வர். ஆனால் இந்த இருவரும் பிசகின்றி புரிந்து கொள்வார்கள்.
அதாவது ரத்னா, பெண் என்ற முறையில் சமூக கட்டுப்பாட்டை மீறி ஒருத்திக்கு ஒருவன் என்பதைத் தாண்டி வாழ்பவள் என்றாலும் கொலை செய்கிற அளவுக்கு ஈவிரக்கமில்லாதவள் அல்ல- இதைத்தான் பூவராகன் சொல்கிறார்.
வசந்த் சிடியை போட்டுப் பார்த்தான். ஒரு பாத்ரூம் பின்னணியில் ரத்னாவின் உடலமைப்பு...! ரத்னாவின் அடிவயிற்றில் நிலவோடு நடக்கும் பெண்ணின் உருவம் பச்சை குத்தியிருந்தது. மற்றபடி வேறு ஆண்பிள்ளைகளோ பிறர் சம்பந்தப்பட்ட பொருள்களோ ஏதும் இல்லை.
ரத்னாவின் பங்களாவில் உட்கார்ந்திருந்தான் வசந்த்.
நாராயணன் கொலை செய்யப்பட்டதை ரத்னாவிடம் தெரிவித்தான். அவள் அதிர்ச்சியும் வருத்தமும் காட்டினாள். அவளையே உன்னிப்பாக கவனித்தான்.
“ உங்க படங்கள் நெட்டிலே வராம இருக்கணுங்கிறதுக்காக நீங்களோ உங்களைச் சேர்ந்தவங்களோ அவரை கொன்னிருக்கலாங்கிற சந்தேகமிருக்கு..! ”
வசந்த் இப்படிச் சொன்னதும் கலகலவென்று சிரித்தாள் ரத்னா. கண்ணில் கண்ணீர் வந்து விட்டது.
“ ஓ வசந்த்..! என் பங்களாவை கரெக்டா கண்டு பிடிச்சிட்டீங்களா? வழியில யார் கிட்டயாவது கேட்டீங்களா? ”
வசந்த் பார்வையை விலக்காமல் சொன்னான், “ஓ, கேட்டேன்..! சோனா தந்த சோனா அதோ அந்த வீட்டுல இருக்கான்னு சொன்னாங்க...! ”
“ அதுக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா? ”
“ ம்கூம்.. ”
“ சோனான்னா தங்கம்- அதாவது என்னைச் சொல்றாங்க.. இன்னொரு சோனா இஸ் ஃபார் சோனாகஞ்ச்.. கோல்கொத்தாவோட சிவப்பு விளக்கு ஏரியா... நான் பிறந்ததே அங்கேதான். என் அம்மா இருந்ததும் அங்கேதான். பல கை மாறி இங்கே வந்திருக்கேன்.. அது எல்லோருக்கும் தெரிஞ்ச ரகசியம். என் படம் நெட்டுல வர்றதால எனக்கென்ன எக்ஸ்ட்ரா நஷ்டம் வந்துடப் போகுது? ”
“ ஆனா உங்களை பிளாக்மெயில்..? ”
“ அட போங்க..! பிளாக் மெயில் செய்தா பயம் வரணும். நாராயணன் அவர் பெண்டாட்டிய பயமுறுத்தற மாதிரி என்னை பயமுறுத்த நினைச்சார்..! அவரைப் பார்த்தா எனக்கு காமெடி சானல் பார்க்கிற மாதிரியே இருக்கும்.. கொஞ்ச நேரம் வேடிக்கை பார்ப்பேன்... அவர் உண்மையிலேயே என் மேல பிரியமா இருந்தார்.. ! அவர் பிரியத்துக்கு கட்டுப்பட்டு சில சமயம் பயந்த மாதிரி நடிப்பேன்..! அவ்வளவுதான்..! ”
“ அவர் பிரியத்துக்கு கட்டுப்பட்டிருந்தா கல்வி மந்திரியை எதுக்கு உள்ளே விட்டீங்க? ”
“ ஏன், கல்வி மந்திரி உங்க அப்பாவா? ” திரும்பவும் ரத்னா சிரித்தாள். “ அட வசந்த்,,! நாராயணனுக்கும் எனக்கும் ஒரு வருஷப் பழக்கம்தான்..! அண்ணாமலைக்கும் எனக்கும் ஒன்பது வருஷப் பழக்கம்..! ”
“ சரி, உங்க கடந்த காலத்தை பத்தி விரிவா சொல்லுங்க..! ”
ரத்னாவை இந்தக் கேள்வி தாக்கி ஓரடி பின்னால் நகர வைத்தது.
“ என் வீட்டுல, என்னைப் பார்த்த பிறகும் பேசிட்டிருக்கிற ஒரே ஆம்பளை நீங்கதான்..! உங்க உடம்புக்கு ஒரு குறையும் இல்லையே? ”
வசந்த் சிரித்தான். “ நிலாவோட ஒரு பொண்ணு நடந்து போற மாதிரி பச்சை குத்திக்கிறது சோனாகஞ்ச் வழக்கமா ? ” என்றான்.
அவள் ஆமோதித்தாள். ஒரு சேரை இழுத்து வசந்த்துக்கு மிக அருகில், எதிரில் போட்டு உட்கார்ந்தாள். அவள் முந்தானை நழுவி வசந்த்தின் காலடியில் விழுந்தது.
“ என்னோட கதையை யாருக்கும் கேட்கணும்னு தோணிணதில்லே. நீங்க கேட்கறீங்க.. என்ன சொல்லணும்? ”
“ உங்க அம்மா, அப்பா.. கூடப் பிறந்தவங்க.......சோனாகஞ்ச்சுல இருந்து தமிழ்நாட்டுக்கு எப்படி வந்தீங்க? ”
“ ம்க்கும்.. இன்னும் ரேஷன் கார்டு இருக்கான்னு கேட்க வேண்டியதுதானே? அப்பா யாருன்னு எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிஞ்சி என் கூடப் பிறந்தவங்க ஒரு அண்ணன், ஒரு தங்கச்சி..! தங்கச்சி என்னை மாதிரியே இருப்பாளாம்.. என்னை விட பத்து வயசு சின்னவ. இப்ப அவங்க எங்கேன்னும் எனக்குத் தெரியாது..! என்னோட பதினாலு வயசுல தெலுங்கு ஜமீன்தார் ஒருத்தர் என்னை விலை கொடுத்து வாங்கினார். அவரோட சமஸ்தானத்துக்கு கூட்டிட்டு போயி தாலி கட்டி வச்சுகிட்டார். பதினைஞ்சு வயசுல குழந்தை பிறந்தது.. அழகான ஆண் குழந்தை..! என் வாழ்நாள்ல வச்சு நான் சந்தோஷமா இருந்தது அந்த நேரம்தான்... !
ஜமீன்தார் குழந்தையை எடுத்துகிட்டார். என் கழுத்துல கிடந்த தாலியை கழட்டிட்டு என்னை ஒரு கோயில்ல கொண்டு போய் விட்டுட்டார். ராசியான பொண்ணுன்னு சொல்லி அங்கிருந்து அவருக்குத் தெரிஞ்ச தமிழ்நாட்டு ஜமீன்தார் வீட்டுக்கு என்னை அனுப்பி வச்சார்..
தமிழ்நாட்டு ஜமீன்தாருக்கும் குழந்தை பிறந்தது- என் மூலமா இல்ல; அவர் மனைவி மூலமா.. அப்புறம்.. நான் ஜமீன் பொதுச் சொத்தானேன். விவரம் தெரிஞ்சப்புறம் ஜமீனை விட்டு வெளியே வந்துட்டேன். எனக்கு பிடிச்ச ஒருத்தரோடு வாழ ஆரம்பிச்சேன். அவர் இறந்துட்டார்.. அப்புறம் ஏழெட்டு கை மாறினேன்.. கடைசியா நாராயணன்..! ”
ரத்னா புன்னகைத்தாள்.
“ இதுதான் என் பொழப்பு. நேத்து வந்த இந்த நாராயணன் நான் அவருக்கு துரோகம் செஞ்சுட்ட மாதிரி வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சார். இது துரோகம்னா இவரோட மனைவிக்கு இவர் செஞ்ச காரியத்துக்குப் பேரென்ன? ”
வசந்த் வாய் விட்டு சிரித்தான். ரத்னாவும் அதில் கலந்து கொண்டாள்.
“ பிறகு உங்களுக்கு குழந்தை ஏதும் பிறக்கலையா? ”
“ கருச்சிதைவு நிறைய பண்ணியிருக்கேன். கடைசியா கருவோடு கர்ப்பப் பையையும் எடுக்க வேண்டியதாச்சு.. ”
பழைய நினைவில் அப்படியே மூழ்கியவள் வசந்த்தை பார்த்தாள். “ ஆமா, உன்..... உங்க வயசு என்ன? ” என்றாள்.
“ ஐயையோ, நான் சம்பளத்தைச் சொன்னாலும் சொல்வேனே தவிர வயசைச் சொல்ல மாட்டேன்...! ” என்றான் வசந்த். “ ஏன் கேட்கறீங்க? ”
“ இல்ல.. ” அவள் குரல் தழுதழுத்தது. வசந்த்தின் முகத்தில் எதையோ தேடினாள். முந்தானை அப்படியே ஏறி உடலை மூடியது.
“ எனக்குப் பதினைஞ்சு வயசுல பையன் பிறந்தான்னு சொன்னேனே, ஒரு வேளை அந்தப் பையன் நீயா... நீங்களா இருந்திட மாட்டீங்களாங்குற நப்பாசைதான்.. உங்க நடத்தை அப்படி நினைக்க வைக்குது...! ”
முணுக்கென்று அவள் கண்களில் நீர் முத்துக்கள் உதித்து உருண்டன.
வசந்த் நெகிழ்ந்தான்.
“ இதுக்கு எதுக்கு ரிஷி மூலம், நதி மூலம்? நான் யாருக்குப் பிறந்தா என்ன? என்னை உங்க மகனாவே நினைச்சுக்கோங்க..! ! ”
அந்த ஒரு வாக்கியம் அவள் முகத்தை, தோற்றத்தை ஏன் மனதையும் மாற்றியது..! !
“ வசந்த்.. வசந்த்.. வசந்த்.. ” விசும்பினாள்.
“ அழாதீங்கம்மா... எல்லாம் சரியாயிடும்.. ”
கடந்த இரண்டு மாதமாக அந்த பங்களாவில் வந்து போனவர்களின் பெயர், விலாசம், அலைபேசி எண் பட்டியலைக் கேட்டான் வசந்த். அவன் கிளம்பும்போது முதுகுப் பக்கம் வாத்யல்யமான குரல் கேட்டது, ரத்னாதான்.
“ உடம்பை கவனிச்சுக்கோப்பா...! ”
அடுத்து அவன் நின்றது தடயவியல் துறை உதவிப் பேராசிரியை பிரியம்வதா முன்பு..
“ நாராயணன் கொலை செய்யப்பட்டிருக்கார். யாரோ அவரை மிரட்டி திருவான்மியூர் பக்கமா கூட்டிட்டு வந்திருக்கணும். அவர் ஓட, ஓட, பெட்ரோல் ஊத்தி, கொளுத்திப் போட்டிருக்கணும்.. நடுநிசி பன்னெண்டு மணியை ஒட்டி கொலை நடந்திருக்கு. நாராயணன் ஓட்டி வந்த கார்ல எந்த தடயமும் இல்ல..! ”
“ மேடம் ! ஏதோ நீங்களே கொலை செஞ்சா மாதிரி சொல்றீங்க? மொதல்ல இது கொலைன்னு எப்படி சொல்றீங்க? தற்கொலையா கூட இருக்கலாமே? ”
“ ஆமாங்க.., அண்ணாநகர்ல வீட்டை வச்சுட்டு ராத்திரி பன்னெண்டு மணிக்கு திருவான்மியூர் போயா தற்கொலை பண்ணிக்குவீங்க? தற்கொலை பண்ணிகிட்டா கேனும் தீக்குச்சியும் அங்கதானே கிடக்கணும்? ”
“ கேனை யாராவது தூக்கியிருப்பாங்க..தீக்குச்சி காத்துல பறந்து போயிருக்கும்..! ”
“ நாராயணனோட முதுகுல ஆழமான தீப்புண் இருக்கு..! தற்கொலை பண்ணிக்கிறவன் முதுகுப் பக்கம் தீயை வச்சுக்க மாட்டான்..! ”
வசந்த் வாய்க்குள் சிரித்தான். “ நோ அப்பீல்..! ”
இப்போது வசந்த் அமர்ந்திருந்தது நாராயணன் வீட்டில்..! சம்பிரதாய துக்க வீடாக இருந்தது அது. நாராயணனின் தம்பி முகுந்த் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தான். உறவினர்களிடம் விபத்து என்று சொல்லியிருந்தான்.
அடுத்து வசந்த் போனது கற்பகவல்லி வீட்டுக்கு. இந்த கற்பகவல்லி ரத்னாவின் வேலைக்காரி.
ரத்னா கொடுத்த பட்டியலை கற்பகவல்லியிடம் காட்டினான்- “ ரத்னாம்மா பங்களாவுக்கு வந்துட்டுப் போறவங்க பட்டியல் இது. இதுல யார் பேராவது விட்டுருக்கா? ”
வசந்த்தின் கையிலிருந்த ஆயிரம் ரூபாய் கற்பகவல்லியை இயக்கியது. “ ஆமாங்க.. பாண்டுன்னு ஒருத்தர். ரொம்ப முக்கியமானவர்..! அவர் பெயர் இதிலே இல்லைங்க. பாண்டுதான் பங்களாவுல கணக்குப்பிள்ளை... நிர்வாகி எல்லாம்..! ”
பாண்டுவின் விலாசம், அலைபேசி எண்ணை வாங்கினான்.
பாண்டுவின் வீடு திருவான்மியூரில் இருந்தது ! கள்ளச்சாவி போட்டு பூட்டிய கதவைத் திறந்தான். பீரோவில் சில ஆவணங்களின் பிரதி, சமீபத்தில் பாண்டு மலேஷியாவுக்குச் சென்றதை தெரிவித்தன. ஒரு புகைப்படம் இருந்தது. மலேஷிய ஹோட்டல் பாரடைஸ் முன்பு பாண்டு போஸ் கொடுக்கிறான். ரிஷப்சனில் மேஜைக்கு அந்தப் பக்கம் ரிஷப்சனிஸ்ட். காமிராவின் ஃபோகஸ் பாண்டுவை விட ரிஷப்சனிஸ்டை நன்றாகக் காட்டியது. போட்டோவை திருப்பினான். புரியாத பாஷையில் ஏதோ எழுதியிருந்தது.. அதை அலைபேசி காமிராவில் போட்டோ எடுத்து ஒரு ஆப்ஸை இயக்கி பேஸ்ட் செய்தான். தமிழ் என்பதை தேர்ந்தெடுக்க, அது என்ன மொழி என்பதும் அதன் தமிழர்த்தமும் வந்து விழுந்தன. வங்க மொழியில் “ ரஞ்சனா, என் கண்மணி, நீடூழி வாழ்க ” என்று எழுதியிருந்தது.
வசந்த்துக்கு இதயம் கனத்தது..! தப்பானவர்கள் என்று முத்திரை குத்தப் பட்டவர்களிடம் என்ன ஒரு பாசம் ! பிரியம்..! டிரைவர் சுப்ரமணி கொடுத்த சிடியை உருத்தெரியாமல் அழித்தான்.
திரும்பவும் ரத்னாவின் பங்களா....
பங்களாவுக்குப் பக்கத்தில் ஒளிந்திருந்தான் வசந்த்.
வசந்த்தின் கணக்கு சரியாக இருந்தால்...
அதோ யமஹா பைக்... வருவது பாண்டுவாகத்தான் இருக்கும்.
வேகமாக ஓடி, தடுத்தான்..!
“ ஏய், யார் நீ? தள்ளிப்போ..! ”என்ற பாண்டு வசந்த்தை கவனமாகப் பார்த்தான்.
“ அங்கிள் ! நான் வசந்த்” என்றான் வசந்த்.
அந்த வார்த்தைகள் மந்திரமாய் பாண்டுவை நிறுத்தின.
“ நீ... நீ... ? காலையில ரத்னா மேடம் உன்னைப் பத்தி போன்ல பேசி பேசி மாஞ்சி போனா...! அழுதா...! சிரிச்சா...! உன்னை அவ தன் மகனாவே பார்க்கிறாப்பா..! ”
பாண்டு பரிவோடு வசந்த்தின் தலைமுடியை கோதினான். “ நீ எப்ப பிறந்தே? யார் உன் அப்பா அம்மா..? ”
“ யாருக்குத் தெரியும்..? ” வசந்த் தோளைக் குலுக்கினான். “நான் சிவானந்த ஆசிரமத்து அனாதைப் பையன்..! ”
பாண்டு வசந்த்தை தழுவிக் கொண்டான். “ ரத்னா மேடத்துக்கு ஆபத்துன்னு அநாமதேய மெசேஜ் வந்திருக்குப்பா... நான் போய் பார்த்துட்டு வந்திடறேன்.......! ”
“ பாண்டு அங்கிள்..! உங்க தங்கச்சி ரத்னாவுக்கு ஒரு ஆபத்தும் இல்ல..! அந்த மெசேஜை அனுப்பியதே நான்தானே? ”
பாண்டு சிலையாக நின்றான்.
“ உங்களுக்கு இன்னொரு தங்கச்சியும் உண்டுதானே? ரஞ்சனா..! மலேசியாவுல ஹோட்டல் பாரடைஸ் ரிஷப்சனிஸ்ட்...! நீங்க நாராயணனை கொலை பண்ணது அவங்க வாழ்க்கையை காப்பாத்த தானே ? ”
பாண்டுவும் வசந்த்தும் ஒரு பாழடைந்த கட்டடத்தில் உட்கார்ந்திருந்தனர்.
பாண்டு பெருமூச்செறிந்தான். “ ரத்னாவை நான் சந்திச்சதே கிளையண்ட்டாதான். அவ உடம்புல குத்தியிருந்த பச்சையை வச்சுத்தான் அவளை என் தங்கச்சின்னு தெரிஞ்சுகிட்டேன்.. அத அவ கிட்ட வெளிப்படுத்த முடியல. அதுக்கப்புறம் அவ பங்களாவுக்கு அடிக்கடி போனேன்.. கிளையண்டா இல்ல, சொல்லிக்க முடியாத அண்ணனா..! என்னால முடிஞ்ச ஒத்தாசைய அவளுக்கு செஞ்சிட்டிருக்கேன்..!
ரஞ்சனாவோட புருசன் ஐ.டி எஞ்சினியர். ஃபேஸ்புக்குல அவங்க கல்யாண போட்டோவை தற்செயலா பார்த்தேன். ரஞ்சனா ரத்னா மாதிரியே இருப்பா..! .நேரா மலேஷியாவுக்குப் போய் அவ என் தங்கச்சிதான்னு உறுதிப்படுத்திகிட்டேன். அவ கிட்டயும் என்னை வெளிப்படுத்திக்கல. என் தங்கச்சி நல்லா வாழறான்னு மனசு நிறைஞ்சி இங்க வந்தா இந்த நாராயணன் மடையன் ரத்னாவை பிளாக்மெயில் பண்ணிட்டிருந்தான். ரத்னா போட்டோ நெட்டுல வந்தா ரத்னாவுக்கு ஒண்ணுமில்லே; ரஞ்சனாவுக்கு பாதிப்பு வந்துடுமே..! அந்த பாழாப் போன சோனாகஞ்ச் பச்சை அத்தனை சுலபத்துல அழியாது, தெரியுமா ?? ரத்னா கிட்ட சொல்லி நாராயணனை நிறுத்தக் கூட அவகாசமில்ல.. அதான் தூக்கிட்டேன்..! ”
“ ரத்னாம்மாவுக்கு நீங்க யாருன்னு தெரியும் அங்கிள். உங்களை காப்பாத்த முயற்சி பண்ணாங்க. நான் அவங்க கிட்ட பங்களாவுக்கு வந்து போறவங்க லிஸ்ட் கேட்டேன். அதுல உங்க பேரை அவங்க சேர்க்கலை..! அதுல இருந்தே நீங்கதான் கொலையாளின்னு தெரிஞ்சுகிட்டேன். நீங்க தலைமறைவா இருந்தீங்க.. உங்களை வரவழைக்க மெசேஜ் கொடுத்தேன்.. வந்துட்டீங்க..! ”
“ அடுத்து என்ன பண்ணப் போற வசந்த்? ”
“ அதுதான் தெரியல..! ”
“ அந்த போட்டோக்களை போலிஸ் பார்த்ததா? ”
“ இல்ல.. இனியும் பார்க்க முடியாதபடிக்கு பண்ணிட்டேன்...! ”
அதற்குள் தடதட சத்தம்..... இன்ஸ்பெக்டர் பூவராகன்..! வசந்த் திடுக்கிட்டான். வசந்த்தை தொடர்ந்து வந்திருக்கிறார்..!
பாண்டு அனிச்சையாக ஓட, எளிதில் பிடிபட்டான்.
“ நீதான் நாராயணனை கொலை பண்ணியா, ஏண்டா? ”
பாண்டு நிதானமாகப் பேசினான். “ நானும் ரத்னாவும் ஏடாகூடமா இருக்கற போட்டோக்கள நெட்டுல போட்டுடுவேன்னு ரத்னாவை நாராயணன் மிரட்டினான். நான் அரசியல்ல இறங்கலாம்னு இருக்கறப்போ இது எனக்கு கௌரவப் பிரசினை.. அதனால அவனைக் கொன்னுட்டேன்...! ”
முற்றும்
....................................................................................................................................................................................