பொஸ்பரஸ் குழந்தைகள்

சாம்பல் நிறக் கொப்பளங்கள் தோன்றிய
மழலைச் சரீரங்களில் எழும் போர்க்குரல்
தேசக் கனவின் தடத்தில் ஊடுருவி உறுமுகிறது
சாவில் மிதந்த நெடுங்காட்டின்
தாலாட்டுப் பாடல்களை
எறிகணைகள் கல்லறைகளாக்கி
கடலோடு தூக்கமழித்தது
நிழலோடு வழிந்துருகும் இரவின் ஒளி
சவப்பெட்டிகளின் மூடியை கம்பீரமாய்த் திறக்கிறது
தாய் விரல் பிசையும் குழந்தையின் முகமேறி
விரிந்து கிடக்கும் ஊழிச் சூறையில்
பனைகள் முறிந்து
பாழ்நிலம் கவிந்து கலவரமாகிறது
மயான உயரத்தை கடந்து வந்த
பொஸ்பரஸ் குழந்தைகளிடம்
இறப்பை நிறைக்க
புற்றுநோய் துவங்க
குழந்தைகள் குழப்பமில்லாது
குருதிகளோடு தனித்தார்கள்.

எழுதியவர் : கவிஞர் அகரமுதல்வன் (17-Jul-15, 11:38 am)
பார்வை : 83

மேலே