கொள்ளுதய்யா மனம் வெறுப்பு
உணர்வுக்கு சாயம் பூசி
உறவாடும் உறவுதனை
சுற்றுமுற்றும் பார்க்கையிலே
கொள்ளுதய்யா மனம் வெறுப்பு
மண் பெருமை தாங்கி வரும்
மரபு என்னும் பொக்கிஷத்தை
மண்ணிலே புதைக்கையிலே
கொள்ளுதய்யா மனம் வெறுப்பு
மனிதம் காக்கும் வேளையிலே
வம்பு பேசும் கயவர்களை
காணுகின்ற வேளையிலே
கொள்ளுதய்யா மனம் வெறுப்பு
கல்வி என்னும் பெட்டகத்தை
சந்தையிலே கொட்டி விற்கும்
கனவானைக் காண்கையிலே
கொள்ளுதய்யா மனம் வெறுப்பு
கண்ணகிக்கு சிலை வடித்தும்
கற்பு எனும் புனிதமதை
காற்றில் விடக் காண்கையிலே
கொள்ளுதய்யா மனம் வெறுப்பு
காதல் எனும் ஓரமுது
காமமெனும் ஓர் விஷமாய்
மாறுவதைக் காண்கையிலே
கொள்ளுதய்யா மனம் வெறுப்பு
சின்ன சின்ன சண்டைகளும்
தீராத பகையாகி
உறவுப் பாலம் உடைகையிலே
கொள்ளுதய்யா மனம் வெறுப்பு
தன் பிள்ளை காதலினால்
தவிக்கும் சில பெற்றோர்கள்
கொல்லும் மனம் படைக்கையிலே
கொள்ளுதய்யா மனம் வெறுப்பு
மூதாட்டி ஆன தாயை
முதியோர் இல்லம் சேர்க்கும்
மூடர்களைக் காண்கையிலே
கொள்ளுதைய்யா மனம் வெறுப்பு
தந்தை ஓயும் வேளையிலே
தனி மரமாய் ஆக்குகின்ற
பிள்ளை மனம் நினைக்கையிலே
கொள்ளுதய்யா மனம் வெறுப்பு
ஆங்கிலமும் ஆடையுமே
அடையாளம் என்று சுற்றும்
அறிவிலியைக் காண்கையிலே
கொள்ளுதய்யா மனம் வெறுப்பு
மதத்தினையே மதுவாக்கி
மாதினையே விலையாக்கும்
காவிகளைக் காண்கையிலே
கொள்ளுதய்யா மனம் வெறுப்பு
பணமிருக்கும் பலமிருக்கும்
பதவி எனும் பவுசிருக்கும்
பசிப்போரை வெறுக்கையிலே
கொள்ளுதய்யா மனம் வெறுப்பு
சொந்த பந்தம் தேடலின்றி
சொத்து மட்டும் சொந்தமென
கொள்ளும் உள்ளம் காண்கையிலே
கொள்ளுதய்யா மனம் வெறுப்பு
கடவுளையும் கருமத்தையும்
கருவறையும் கல்லறையும்
நினையாதோர் நினைக்கையிலே
கொள்ளுதய்யா மனம் வெறுப்பு